முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பா.ஜ.க. யாத்திரையில் முட்டை வீச்சு

வியாழக்கிழமை, 29 பெப்ரவரி 2024      அரசியல்
BJP 2023-11-05

ஐதராபாத், தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டம் பீமதேவார பள்ளி என்ற இடத்தில் நடந்த பா.ஜ.க.வின் விஜய் சங்கல்ப யாத்திரையின் போது மர்ம நபர்கள்  சரமாரியாக முட்டைகளை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் வரும் பா.ஜ.க.வினர் ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி குறித்து விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், வாரங்கல் மாவட்டம் பீமதேவார பள்ளி என்ற இடத்தில் பா.ஜ.க.வின் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்தது. இதில் கரீம் நகர் எம்.பி.யும், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவருமான பண்டி சஞ்சய் கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் பண்டி சஞ்சய் வந்த கார், மற்ற வாகனங்கள் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்கினர். இதனால் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டது. 

தகவலறிந்து அப்பகுதியில் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். முட்டை வீச்சு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. 

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து