முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.விற்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு தொடருவேன்: சீமான் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

சென்னை : மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, 

பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிந்த பிறகு, வழக்குத் தொடர்வேன். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். பள்ளிக் கூடங்களில் இருந்து நாட்டின் தேசிய மலர் தாமரை என்பதை படித்து வருகிறோம். அதை எப்படி தேர்தல் ஆணையம் ஒரு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிக்கான சின்னமாக ஒதுக்கியது. 

நாம் தமிழர் கட்சிக்கு மயில் சின்னத்தை ஒதுக்கும்படி கேட்ட போது, அது தேசிய பறவை என்று கூறி தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. ஆனால், பா.ஜ.க.வுக்கு எப்படி தாமரை சின்னத்தை ஒதுக்கியது. ஒன்று தேசிய மலராக தாமரையை அறிவித்து விட்டு, பா.ஜ.க.வின் சின்னத்தை எடுக்க வேண்டும். அல்லது தாமரையை பா.ஜ.க.வுக்கு சின்னமாக அறிவித்து, தேசிய மலராக பிற மலரை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

இது அநீதி. ஒரு அரசியல் கட்சி நாட்டின் தேசிய மலர் என்று கூறப்படுவதை எப்படி கட்சி சின்னமாக தாங்கி நிற்கிறது. இதுதான் ஜனநாயகமா? பல ஆண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தேடி அலைகின்றன. 

தமிழகத்தில் நாங்கள்தான் பெரிய கட்சி. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். மக்களை நம்பி தேர்தலில் நிற்பதற்கு ஒருவருக்கும் துணிவில்லை. இன்னும் தமிழகத்தில் யார் எந்தப்பக்கம் செல்லப் போகின்றனர் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து