முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் தருவதாக சொன்ன விடியல் எப்போது வரும்? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Annamalai 1

Source: provided

சென்னை : நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல் எப்போது வரும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இத்தனை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மூன்று ஆண்டு காலமாக, திமுக ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் இவற்றை எல்லாம் மேம்படுத்தச் செலவிடப்பட்ட நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் ஆகியவையை எந்தக் கணக்கில் வைப்பீர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களே?. 

தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால், இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா? மத்திய அரசு பெறும் வரிப்பணத்தில், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் நிதி, அதுபோக, நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் திட்டங்கள் என ஏராளமாக கணக்கு சொல்ல முடியும். 

நீங்கள் பெறும் வரிப்பணத்தை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?. டாஸ்மாக் வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக, ஜி.எஸ்.டி.யில் சுமார் 70 சதவீதம் நிதி என நேரடியாக தமிழக அரசுக்கு வரும் வருமானம் இத்தனை இருக்கையில் மாநிலம் முழுவதும், அரசுப் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், சிறுகுறு தொழில்முனைவோர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே ஏன்?  

தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது? பாரதப் பிரதமர்  மோடி உறுதியளித்த, பத்து லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்பது கூடத் தெரியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. 

கடந்த 2021 தேர்தலின்போது தி.மு.க. வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது என்பதை முதல்வர் மக்களுக்குச் சொல்லத் தயாரா?.மதுரை எய்ம்ஸ் கல்லூரிக் கட்டிடங்கள், 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பலமுறை அறிவித்த பிறகும், மீண்டும் மீண்டும் மதுரை எய்ம்ஸ் என்று உளறிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?. 

மதுரை எய்ம்ஸ் 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருவது உறுதி என்பது மக்களுக்குத் தெரியும். அது மோடியின் கேரண்டி. ஆனால், நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல் எப்போது வரும் என்பதே மக்களின் கேள்வி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து