முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர் அருகே சோகம்: மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் பலி

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Thiruvallur 2024-05-20

Source: provided

திருவள்ளூர் : திருவள்ளூர், பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் பகுதியைச் சேர்ந்தவர் சாய்குமார் ( 25). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ள சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, மணல் மூட்டையை கட்டி மோட்டார் சைக்கிளில் வைக்க முயன்ற சாய்குமாரை, ரோந்து பணியில் இருந்த போலீஸார் பிடிக்க முயற்சித்துள்ளனர்.

போலீஸாரிடம் சிக்காமல் இருக்க கொசஸ்தலை ஆற்றுக்கரை அருகே உள்ள ரத்தினம் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்த சாய்குமார், திரும்பி வருவதற்கு வழி தெரியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து, அவர், தனது கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பரான பார்த்தசாரதிக்கு ( 21 ) மொபைல் போனில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சாய்குமாரை அழைத்து வரச் சென்ற பார்த்தசாரதி, அவர் கரும்புத் தோட்ட மின் வேலியில் சிக்கி இருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, பார்த்தசாரதி வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த பகவானுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பகவான் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, சாய்குமாரை காப்பாற்ற முயன்றதில் பார்த்தசாரதியும் மின்வேலியில் சிக்கிக்கொண்டது தெரிய வந்துள்ளது.

இதயறிந்த வெளியகரம் பொதுமக்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, சாய்குமாரையும் பார்த்தசாரதியையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த போது இருவருமே ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் குத்தகைக்கு எடுத்து, கரும்பு தோட்டம் அமைத்து வந்துள்ளார். கரும்புத் தோட்டத்தில் காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சாய்குமாரும் பார்த்தசாரதியும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து