முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி: தலைமைச்செயலர் ஆலோசனை

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Shiv-Das-Meena

Source: provided

சென்னை : தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது.

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், காவல் துறையினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பிட்ட இடைவெளியில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ‘சாகர் கவாச்’ ஒத்திகை தமிழக கடலோரப்பகுதிகளில் நடத்தப்பட்டது. மிக நீண்ட கடலோரப் பகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமம், தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள காவல்துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், காவல்துறையினரே பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான ’சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பொதுத்துறை செயலாளர் நந்தகுமார், கடலோர காவல்குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், கடலோர காவல்படை டிஐஜி ஜெயந்தி, மற்றும் கடற்படை, சுங்கத்துறை, ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ’சாகர் கவாச்’ ஒத்திகையை எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து