முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்னலை புறக்கணித்ததால் கோர விபத்து: மேற்குவங்கத்தில் பயங்கரம்: எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரெயில் மோதி 15 பேர் பலி : ஜனாதிபதி - பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
West-Bengal 2024-06-17

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திரமோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் கூச்சல்...

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி என்ற இடத்தில் திங்கள்கிழமை (நேற்று) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. டார்ஜிலிங் மாவட்டத்தில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, ரங்கபாணி ரயில் நிலையம் அருகே பின்னால் இருந்து  அதி வேகத்தில் வந்த சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. மோதிய வேகத்தில் பயங்கர சத்தம் பல மீட்டர் வரை கேட்டுள்ளது. இதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெட்டிகள் பயங்கரமாக குலுங்கியதில் அலறி கூச்சலிட்டனர். 

5 பெட்டிகள் வரை... 

இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது. இதில் கடைசி பெட்டி தண்டவாளத்திலிருந்து சில அடிகள் தூரம் வரை தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில், சிக்னலைப் புறக்கணித்த சரக்கு ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் காவலர் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்கு விரைந்தார். சரக்கு ரயிலுக்கு கிடைத்த சிக்னலை சரியாக கவனிக்காமல் முன்னேறியதால்தான் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. 

மம்தா வருத்தம்....

இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள செய்தியில் கூறியதாவது, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

அவசர உதவி எண்கள்...

விபத்து குறித்து தகவல் அறிய தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 033-23508794 (பிஎஸ்என்எல்), ரயில்வே எண் 033-23833326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

ஜனாதிபதி இரங்கல்...

ஜனாதிபதி திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் மாவட்டத்தில் நேரிட்ட ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்...

பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செல்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

மேலும் மத்தியி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ரயில்வே சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும், கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் வழங்கப்படும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை உயர்வு 

விபத்து குறித்து ரயில்வே வாரிய தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெய வர்மா சின்ஹா தெரிவிக்கையில்., "மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த விபத்தில், சிக்னலைப் புறக்கணித்த சரக்கு ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் காவலர் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அகர்தலா-சீல்டா வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டத் தகவலின்படி, விபத்துக்கு மனித தவறுகள் காரணம் என்பது தெரியவந்துள்ளது. சிக்னலை புறக்கணித்ததே விபத்துக்குக் காரணம்" என தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள்....

சரக்கு ரயில் சிக்னலை மீறியதாகவும், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புற பார்சல் பெட்டி மீது மோதியதும் தெரிய வந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரெயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரெயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முழு வீச்சில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து