Idhayam Matrimony

இந்தியாவுக்கு 5-வது தங்கம்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. அதோடு, பதக்கப்பட்டியலில் ஜப்பானை(21 பதக்கங்கள்) பின்னுக்கு தள்ளி இந்தியா 13 இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இறுதிக்கு சிம்ரன் தகுதி

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்று 13-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் டி-12 ஓட்டப்பந்தயம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.33 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

உள்ளூர் போட்டி: ரிஷப் கருத்து

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: துலிப் கோப்பையில் விளையாடவுள்ளது சிறப்பான உணர்வைக் கொடுப்பதாக நினைக்கிறேன். ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய பிறகு, எப்போது இந்திய அணிக்காக விளையாடப் போகிறேன் என்று அடிக்கடி யோசிப்பேன். கடந்த 6 மாதங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையும் வென்றுள்ளோம். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சிறுவயதிலிந்தே எனது ஆசையாக இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு துலிப் கோப்பையில் விளையாடவுள்ளேன்.

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக துலிப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடுவது மிகவும் முக்கியம். ஒரு கிரிக்கெட்டராக அதிகப் படியான பயிற்சிகள் தேவைப்படும். உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்கள் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றார்.

ஜோஸ் பட்லர் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியை பில் சால்ட் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் பாரா வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பாரா வில்வித்தையில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டுள்ள தங்கப்பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் ஆஸ்திரேலியாவின் டேமோன் கெண்டன் ஸ்மித்-அமண்டா ஜென்னிங்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

ஆடவருக்கான பாரா வில்வித்தையில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வென்று தந்தவரான ஹர்விந்தர் சிங் பூஜாவுடன் இணைந்துள்ளதால் இரண்டாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த இணை முதல் சுற்றில் 31-18 மற்றும் 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது சுற்றில் 27-33 மற்றும் 24-33 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னடைவை சந்தித்தாலும் முடிவில் 16-5 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு

கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக வியாழக்கிழமை உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ​​ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவள் மீது ஊற்றி, எரித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி உகாண்டா தடகள கூட்டமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “குடும்ப வன்முறையால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி நேற்று (செப் 5) அதிகாலை மரணமடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து