முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி என்று அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.-

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள். அதன்படி, மகளிர் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் திட்டம், அரசுப் பணிகளில் மகளிர்க்கு 40% இட ஒதுக்கீடு திட்டம், சுய உதவி குழு மகளிருக்கு கடன் வரம்பை அதிகரிக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024:-

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும்; பாலின வேறுபாடுகளைக் களைந்திடவும், பெண்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், பெண்களுக்கு உரிய அங்கீகாரம், சமூகநீதி, பாலின சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை" 2024-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் 21.2.2024 அன்று வெளியிட்டு மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளார்கள்.

விடியல் பயணம்:-

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு வந்து முதன் முதல் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் இது வரையில் 682.02கோடி முறை பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள் 36.89 லட்சம் முறையும், , மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் பயனாக மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்கின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:-

ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் பெண்கள் திகழ்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று கூறாமல் 'மகளிர் உரிமைத் தொகை என்று பெயரிட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ1,000 உரிமைத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகிறார்கள். இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

புதுமைப் பெண் திட்டம்:

முதல்வர் மு.க.ஸ்டாலினின். ஒரு புரட்சிகரமான திட்டம் இது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு, மத்திய அரசு சார்ந்த, மருத்துவக் கல்லூரி உட்பட உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகின்றது.

நேரடிப் பணப் பரிமாற்ற முறைப்படி, இந்த உதவித்தொகையை இதுவரை 4,95,000, மாணவியர் நேரடியாகத் தம் வங்கிக் கணக்குகளில் பெற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து:-

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

மகளிர் இடஒதுக்கீடு 40 சதவீதம்:-

அரசுப் பணிகளில் மகளிர்க்கான இடஒதுக்கீடு 30 சதவீதம் என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் சட்டமியற்றி நடைமுறைப் படுத்தினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் இந்த இடஒதுக்கீடு 30 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தி மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுத்துள்ளார்.

கடன் உச்சவரம்பு அதிகரிப்பு:-

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிடும் கடன் உச்ச வரம்பை ரூ.12 லட்சம் என்பதில் இருந்து ரூ.20 லட்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உத்தரவிட்டார். 2016 முதல் 2020 வரை நான்கு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 39,468.88 கோடி. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 2021 -முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 1,12,299 கோடி. அரசு அலுவலகங்களில் பணி புரியும் மகளிர் ஆசிரியைகளின் மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.

காவல்துறையில் பெண்கள்:-

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் காவலர்கள், முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது வீதிகளில் நீண்ட நேரம் நிற்கவைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க ஆணையிட்டு, அவ்வாறே வழங்கப்படுகிறது தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் திட்டம் அறிமுக செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையில் பெண் ஓதுவார்கள்:-

திருக்கோவில்களில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் திட்டத்தின்கீழ் ஓதுவார் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஓதுவார் பயிற்சி பெற்றவர்களில் 42 பேர் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண் ஓதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு 1996இல் வழங்கப்பட்டது . பின்னர் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு, லட்சக் கணக்கான மகளிர் உள்ளாட்சி நிறுவனங்களில் பதவிப் பொறுப்புகள் பெற்றுத் தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். இன்று 21 மாநகராட்சிகளின் மேயர்களில் 11 மகளிர் பெண் மேயர்களாக விளங்குவது தமிழ்நாட்டிற்குரிய தனிச் சிறப்பாகும்.

சிப்காட் தொழில் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள்:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலனில் கொண்டுள்ள அக்கறையை நமக்கு காட்டும் ஒரு மகத்தான திட்டம் - குழந்தைகள் காப்பகங்கள் ஆகும். தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்கிட உத்திரவிட்டார். இந்த 17 தொழிற் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 இலட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றார்கள். இந்தக் குழந்தைகள் காப்பகங்கள், பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாகப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் உதவுகின்றன. இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசில் புதிய புதிய திட்டங்கள் நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது என்பதை வரலாறு போற்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து