முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.முத்து வாழ்க்கை வரலாறு

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      சினிமா      தமிழகம்
Mk-Muthu-2025-07-19

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார். உடல்நலைக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மகன் மு.க.முத்து பிறந்த சில மணி நேரங்களிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தாயின் அரவணைப்பின்றி பாட்டியிடம் வளர்ந்த மு.க.முத்து இளம் வயதிலேயே தந்தையுடன் கட்சி மேடைகளிலும் பங்கேற்பார். கட்சி கொள்கை விளக்க பாடல்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர். அரசியலிலும் சினிமாவிலும் ஜொலித்துக் கொண்டிருந்த 70களில் அவருக்குப் போட்டியாக மு.க.முத்துவை அவரது தந்தை கருணாநிதி களமிறக்கியதாக சொல்லப்படு வதுண்டு. தன்னுடைய நடை, உடை, பாவனை, மேக்கப் போன்ற அனைத்தையும் எம்.ஜி.ஆரைப் போலவே அமைத்துக் கொண்டார் மு.க.முத்து. ‘பூக்காரி’ தொடங்கி ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ என தான் நடித்த படங்கள் அனைத்திலும் எம்.ஜி.ஆரின்  பார்முலாவை பின்பற்றியே நடித்தார்.

ஆனால் இந்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. எனினும் இவற்றில் இடம்பெற்ற ‘காதலின் பொன் வீதியில்’, ‘எந்தன் மனதில் குடி இருக்கும் நாகூர் ஆண்டவா’ போன்ற பாடல்கள் பரவலாக கொண்டாடப்பட்டன. தனது படங்களில் சில பாடல்களையும் சொந்தக் குரலில் பாடியுள்ளார் மு.க.முத்து. முதலமைச்சரின் மகன் என்ற செல்வாக்கு இருந்தும் கூட அவரால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது. அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை.

ஒருமுறை எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கருணாநிதியிடம் கோபித்துக் கொண்டு ராமாவரம் தோட்டத்துக்குச் மு.க.முத்து சென்றுவிட்டதாக சொல்லப்படுவதுண்டு. பிறகு எம்.ஜி.ஆர் அவரை சமாதானம் செய்து ‘அப்பாவிடன் நான் பேசுகிறேன்’ என்று அனுப்பி வைத்தாராம். என்னதான் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் இறக்கிவிடப்பட்டவர் என்ற கருத்து நிலவினாலும் மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ பட ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து ‘ஆக்‌ஷன்’ சொல்லி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்திருக்கிறார் எம்ஜிஆர். மேலும் மு.க.முத்துவுக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.

அரசியல் மோதல்களுக்கு நடுவே மு.க.முத்து அலைக்கழிக்கப் பட்ட போது ‘பாவம் அவன் இளந்தளிர். அவனை விட்டு விடுங்கள்’ என்று கருணாநிதி சொன்னதாக கூறப்படுவதுண்டு. தந்தையுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தனியாக பிரிந்து சென்ற மு.க.முத்து பல ஆண்டுகள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வறுமையில் கஷ்டப்பட்டார். கருணாநிதியின் மற்றொரு மகனாக மு.க.தமிழரசுவின் திருமணத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. மு.க.முத்துவின் நிலையை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. மு.க.முத்துவுக்கு சிவகாம சுந்தரி என்ற மனைவியும் அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உண்டு.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ல் தான் தன் தந்தை கருணாநிதியுடன் சமாதானம் ஆகி ஒன்று சேர்ந்தார் மு.க.முத்து. சினிமாவிலிருந்து பொதுவாழ்க்கையிலிருந்து பல ஆண்டுகாலம் விலகியிருந்த மு.க.முத்து கடந்த 2008ஆம் ஆண்டு தேவா இசையில் ‘மாட்டுத்தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். 2018ஆம் ஆண்டு கருணாநிதி மறைந்தபோது அவரது இறுதிச் சடங்கில் மு.க.முத்து கலந்து கொள்ளவில்லை. மாறாக அடுத்த நாள் தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு மெலிந்த உடலுடன் இருவர் உதவியுடன் நடந்து வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2023ஆம் ஆண்டு மு.க.முத்து கடும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் தேறினார். இந்த நிலையில் நீண்டநாட்களாகவே உடல்நிலை மோசமாகி இருந்த மு.க.முத்து நேற்று காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து