முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு திரும்பினார் பி.வி. சிந்து

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      விளையாட்டு
PV-Sindhu 2023 08 02

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. இதன் காரணமாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து  துபாயில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்தார்.

கடந்த சில நாட்களாக துபாயில் சிக்கித்தவித்த நிலையில், பி.வி. சிந்து பத்திரமாக நாடு திரும்பியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பத்திரமாக நாடு திரும்பினேன், பெங்களூரு வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். கடந்த சில நாட்கள் மிகவும் தீவிரமாகவும், நிச்சயமற்றதாகவும் இருந்தன, ஆனால் என் வீட்டிற்குத் திரும்பியதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறேன். நம்பமுடியாத தரைப்படை குழுவினர், துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியேற்ற மற்றும் மிகவும் கடினமான நேரத்தில் எங்களை நன்றாக கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி. அவர்களது தொழில்முறை அணுகுமுறையை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அர்த்தமுள்ளதாக இருந்தன. இப்போதைக்கு இது, ஓய்வெடுக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் கண்டறியும் நேரம்," என குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் நம்பிக்கை

டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. முதல் அரையிறுதி போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் அந்த மைதானம் எங்களது ஹோம் மைதானம் என தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கன்ராட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இந்த உலகக்கோப்பையில் எங்களது பெரும்பாலான போட்டிகளை (7-இல் 5 போட்டிகள்) அகமதாபாத்தில் விளையாடியதால், அந்த மைதானம் எங்களுக்கு ஒரு "சொந்த மைதானம்" (Home Ground) போன்ற உணர்வைத் தருகிறது. இந்த மைதானத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்குத் தெரியும். அகமதாபாத் மைதானத்தின் சூழல் தங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகவும், மீண்டும் இறுதிப்போட்டிக்காக இங்கு திரும்புவோம். என ஷுக்ரி கன்ராட் கூறியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா முதலிடம்

மகளிர் அணியின் பேட்டர் தரவரிசையை நேற்று ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராகத் திகழ்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவர் அரைசதம் விளாசி அசத்தியது, இந்த தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா, ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் முதலிடத்தைப் பிடித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கும் மந்தனா, சர்வதேச டி20 தரவரிசையிலும் 1 இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதே தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அலானா கிங், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சோஃபி எக்லெஸ்டோனை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கேப்டன் கவுர் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 இடங்கள் பின் தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டி-20 இறுதி - மெக்ராத் கணிப்பு

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், எம்.ஆர்.எப். பேஸ் அறக்கட்டளை தலைவருமான மெக்ராத் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியம் இல்லை.  இங்கிலாந்தை அரை இறுதியில் எதிர்கொள்ளும் இந்தியா அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும். தொடக்கத்தில் திணறிய இங்கிலாந்து அணி பின்னர் திறமையாக ஆடி வருகிறது. அந்த அணி ஒரு ஆபத்தானது. அதே நேரத்தில் போட்டி தினத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடக்கூடியது.

இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்க அணி மோத வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இதில் தென்ஆப்பிரிக்க அணியே சிறந்தது. அந்த அணி சமீப காலமாக 20 ஓவர் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணியில் மிகப் பெரிய பலமாக பும்ரா இருக்கிறார். அவர் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். தற்போது அர்ஷ்தீப் சிங்கும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். இவ்வாறு மெக்ராத் கூறி உள்ளார்.

மே.இ.தீவுகள் வீரர்களுக்கு சிக்கல்

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும், இந்தியா - இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது. அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை எட்டி இந்திய அணி புதிய சாதனையைப் படைத்தது. 2012, 2016 ஆம் ஆண்டுகளில் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய வீரர் சஞ்சு சாம்சானின் அதிரடி ஆட்டத்தால் சூப்பர்-8 சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்த் தொடுத்துள்ள வேளையில், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் கடும் போர்ப் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இதனால், அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், அங்கு வான்வெளிப் பரப்புகள் மூடப்பட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவைகள் முடங்கின. தற்போது சில விமான நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ள போதிலும், துபை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை.

 

இதன் காரணமாக, நேற்று சென்னையில் இருந்து துபைக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமானங்கள், அங்கு தரையிறங்க அனுமதி கிடைக்காததால் நடுவானில் இருந்து மீண்டும் சென்னைக்கே திரும்பின. துபையில் ஓடுதளம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாகத் தளர்த்தப்படாததால், நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதற்கு மத்தியில், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பவிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், அவர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இந்தியாவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து