முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

மதுரை,பிப்.19

தி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை - மாணவர்களுக்கு சோதனை.

தி.மு.க.அரசில் தொடர்ந்து மின்பற்றாக்குறை நிலவுவதால் தற்போது கூடுதல் நேரம் மின்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொது தேர்வுகள் துவங்கும் நேரத்தில் மின்தடை அதிகரித்திருப்பதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தி.மு.க. அரசு பதிவியேற்ற காலத்தில் இருந்தே கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மின்தடை அமுலில் உள்ளது. கோடை காலத்தில் தான் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை  பயன்படுத்துவார்கள்.அதனால் மின்பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். ஆனால் திமுக அரசில் கோடை காலம் மற்றும் இன்றி மழைகாலத்திலும், பனிகாலத்திலும் கூட மின்தடை ஏற்படுகிறது என்றால் என்ன சொல்வது. எப்போது கேட்டாலும் காற்றாலை மின்சாரம் வரவில்லை, நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் குறைந்து விட்டது என்றுசாக்கு போக்கு சொல்லும் இந்த அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இருக்கும் மின்சாரத்தையும் தடையில்லா மின்சாரம் தருகிறோம் என்று .சொல்லி வெளிநாட்டு தொழிற்சாலைகளை சென்னையை சுற்றி அமைக்க அனுமதி அளித்து விட்டு மற்ற நகர மக்களை இருட்டில் வாழவிடும் இநத அரசின் கொள்கையை என்னவென்று சொல்வது. 

  ஒரு மாநிலத்திற்கு வீட்டிற்கு பயன்படுத்தப்படுவதற்கு போகத்தான் மீதி மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வீடுகள் இருளில் மூழ்கும் போது வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவது தேவைதானா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மின் உற்பத்தியை அதிகரித்து விட்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கினால் வரவேற்க வேண்டியதுதான். பொதுமக்களும், மாணவர்களும் மின்சாரம் இன்றி தவிக்கும் போது இந்த தொழிற்சாலைகள் தேவைதானா என்று மதுரையை சேர்ந்த  ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் கேள்வி கேட்கிறார். இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நகரங்களில்  2மணி நேரமும், கிராமங்களில் 3 மணி நேரமும் மின்தடை அமுலில் இருந்து வந்தது.

  அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி விட்டன. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 ம் தேதி துவங்குகிறது. அடுத்து எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவ, மாணவிகள் இப்போதிருந்தே தீவிர மாக படிக்க துவங்கி விட்டனர். அதிகாலையில் எழுந்து படிக்கலாம் என்றால் காலை 6 மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. மின் வாரிய அதிகாரிகள் 2 மணி நேரமாக மின்தடையை 3 மணி நேரமாகமாக உயர்த்தி உள்ளனர்.கிராமங்களில் 4 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயில் துவங்கும் நேரத்தில் இப்படி மின்சாரதடையை அதிகரித்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது தமிழக மின்வாரியம்.

    தமிழகத்தின் மின் தேவை சுமார் 10 ஆயிரம் மெகாவாட்.  அனல், நீர் மின்நிலையங்களில்  உற்பத்தியாவது போதுமானதாக இல்லை. காற்றாலை மின் உற்பத்திதான் ஓரளவு கைகொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் மின்உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மின் உற்பத்தி பெரிய அளவில் இல்லை. தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தேர்வு முடியும் வரை மின்தடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு அந்த பணத்தை கொண்டு பெரிய அளவிலான மின்சார உற்பத்தை மையங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

மின்தடை குறித்து மின் வாரிய அதிகாரி விளக்கம்

 

மின் தடை நேரம் அதிகரிப்பு குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆ.நச்சாடலிங்கம் கூறும்போது, கடந்த பிப்,9ல் பவர் கிரிட்டிற்கு 9, 657 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. தற்போது 10,620 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சுமார் ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை உள்ளது. மதுரை மண்டலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கு தற்காலிகமாக நகரில் ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணிநேரமும் மின்தடை செய்யப்படுகிறது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony