முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நக்சல் பாதித்த மாநிலங்களின் செயலர்கள் கூட்டம்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 22 - நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்ளின் தலைமை செயலர்கள், காவல்துறை தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களின் நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலர்கள், காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 

நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது நக்சலைட்டுகள் தங்கள் கைவரிசையை காட்டி விடுகின்றனர். சில நேரங்களில் முன்னெச்சரிக்கை இல்லாமல் பாதுகாப்பு வீரர்கள் நக்சலைட்டுகளிடம் சிக்கி கொள்கின்றனர். ஒரிசா மாநிலம் மல்கங்கிரியில் கடந்த வாரம் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். 

நக்சலைட்டுகள் ஒரு மாநிலத்தில் தாக்குதல் நடத்தி விட்டு பிற மாநிலங்களுக்கு தப்பித்து சென்று விடும் நிகழ்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது போன்ற நிலைக்கு மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. அது போல நக்சலைட்டுகளின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருவதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், மாநில போலீசாருக்கும் இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்றும் உறுதியாகி உள்ளது. 

இதனால் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் மாநிலங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நக்சலைட்டுகள் பாதித்த பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களை சென்றடைந்துள்ளன. இத்திட்டங்களை மேலும் எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். 

இக்கூட்டத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க புதிய உத்தியை உருவாக்குவது, ஏற்கனவே கையாளப்படும் உத்தியை மேலும் சிறப்புற செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்