முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் தி.மு.க.வினரால் தே.மு.தி.க. அலுவலகம் சூறை

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், மார்ச்.22 - திண்டுக்கல்லில் உள்ள தே.மு.தி.க. மாவட்ட அலுவலகம் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. உட்பட பல்வேறு கட்சியினர் இணைந்துள்ளனர். மெகா கூட்டணியான அ.தி.மு.க. கூட்டணியைப் பார்த்த தி.மு.க.வினரிடையே தேர்தல் தோல்வி பயம் தொற்றிக் கொண்டது. இதனால் வாக்காளர்களுக்கு இரவு நேரங்களில் இலவச வேஷ்டி, சேலை, பணம் போன்றவற்றைக் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் தே.மு.தி.க. சார்பில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இச்சூழ்நிலையில் நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் தே.மு.தி.க. மாவட்டக் கட்சி அலுவலகம் அமைந்துள்ள ஸ்பென்சர் காம்பவுண்டில் கட்சியினர் உட்கார்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று வேனில் இருந்து இறங்கியது. அவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் தே.மு.தி.க. அலுவலகத்தை அடித்து சூறையாடினர். இதில் டேபிள், சேர், கடிகாரம் போன்றவை நொறுங்கியது. இதுகுறித்து தே.மு.தி.க. தொண்டர்கள் தெரிவிக்கையில், திடீரென 15 பேர் கொண்ட கும்பல் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஆத்தூர் தொகுதியில் எங்கள் அமைச்சருக்கு எதிராக எப்படி நிற்கலாம்? தொகுதிக்குள் உள்ளே நுழைந்து விடுவீர்களா? நுழைந்தால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி எங்களை அடித்து உதைத்து விட்டு சாவகாசமாக சென்றனர் என்று கூறினர்.

தே.மு.தி.க. மாவட்ட கட்சி அலுவலகமானது நகரின் முக்கிய பகுதியான பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் நடந்து செல்லும் பகுதியில் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்துள்ளது. அதனைத் தடுக்க போலீசார் மிகவும் தாமதமாகவே வந்தனர். இதுவும் தி.மு.க. அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தான் நடந்துள்ளது என தே.மு.தி.க. தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எங்களது பலம் என்ன? என்பதை நாங்கள் ஆத்தூர் தொகுதியில் நிரூபிப்போம். தி.மு.க. அமைச்சரை தோற்கடிப்போம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பையும், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியையும் ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்