முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்த உயர்அதிகாரிகள் கூட்டம் ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் - 4 - தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கூட்டம் வருகிற 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய தீவிரவாத தடுப்பு மையங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு  செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  இது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் திட்டமாக உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் அல்லாத  முதல் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள்  மற்றும் மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கூட்டம் ஒன்றை 9-ம் தேதி நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுசெய்திருந்தது.  இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், மாநில டி.ஜி.பி.க்கள் , மாநில உள்துறை செயலாளர்கள், மாநில தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கூட்டம் வருகிற 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோலி பண்டிகை காரணமாகவும், பலர் நீண்ட வார விடுமுறையில் சென்றிருப்பதாலும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறியதை அடுத்து இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிலருக்கு முன்கூட்டியே நிகழ்ச்சிகள் இருப்பதாலும்  அதனால் தங்களால் இந்த 9-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான சந்தேகங்களை விளக்குவதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் தங்களது இயலாமையை தெரிவித்துள்ளதன் காரணமாக இந்த கூட்டத்தை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக  மத்திய உள்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்