முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. உள்பட 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை,மார்.6 - சட்டசபை தேர்தல் முடிந்த உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையொட்டி ஓட்டு எண்ணப்படும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவை, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, பா.ஜ.மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங், நிதீன்கட்காரி, முதல்வர் மாயாவதி, முலாயாம்சிங் யாதவ், அஜீத் சிங், பிரகாஷ் காரத் உள்பட தலைவர்கள் தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தனர். மணிப்பூர், உத்தரகாண்ட்,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. பின்னர் அந்த தேதி மாற்றப்பட்டு பிப்ரவரி 8-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 11-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து 3,4,5,6, ஆகிய கட்ட தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதே நாளில் கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏறக்குறைய 7 கட்ட தேர்தலும் மிகவும் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தீவிரவாதிகள் ஒரு சில இடங்களில் குண்டுவீச்சு போன்ற கலவரத்தில் ஈடுபட்டனர். மற்றபடி இதர 4 மாநிலங்களிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற இந்த 5 மாநிலங்களிலும் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஓட்டுக்கள் எண்ணப்படும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் தேர்தல் கருத்து கணிப்பில் பஞ்சாப்,உத்திரப்பிரதேச மாநிலங்களில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி தலையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் முலாயாம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சிக்கு 190 தொகுதியும் அதனையடுத்து பகுஜன்சமாஜ், பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் அமையும். இந்தநிலையில் பகுஜன்சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் மாயாவதியை நம்ப முடியாது என்று காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக தெரிகிறது. அதேசமயத்தில் மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஒரு சமயத்தில் காப்பாற்றிய சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து சோனியா காந்தி பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. கூட்டணி விஷயத்தில் முலாயாம் சிங் யாதவ் மிகவும் அடக்கமாக பேசி வருகிறார். தேர்தல் முடிவு வெளியாகட்டும். அதன்பின்னர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவு எடுக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்