முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட முதல்வர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது குறித்து மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு மீண்டும் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்தக் கூட்டத்திற்கு முன், பயங்கரவாதம் என்ற பேரரக்கனை வேறறுக்க எத்தகைய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல் படுவது பற்றிய பின்னணி அறிக்கை ஒன்றைத் தயாரித்து மாநில அரசின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதம் வருமாறு:-

மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை அமைப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்ததிற்கு எனது கடும் ஆசேபனைகளை  கடந்த பிப்.17-ஆம் தேதி மற்றும் 20-ம்தேதி எழுதிய கடிதத்தை இங்கு நான் நினைவு கூறுகிறேன்.

அரசியல் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மறுப்பது போல், மீறுவதுபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல் உள்ளது என்பதையும் இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

இத்தகைய சூழலில், நான் தங்களுக்கு எழுதிய கடிகத்தின் மேல் நடவடிக்கைகள் என்ன என்பது தெரியாத நிலையில் உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.

அதில் டில்லியில் மார்ச் 12-ம் தேதி அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.யுடன் தலைமைச் செயலாளரும் அதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை உருபாக்குவது என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சித்தத்துவத்திற்கு பலத்த அடியை அளிக்கக்கூடியதாகும்.

தேசிய அளவில் பயங்கரவாதம் என்ற பேராபத்து தரக்கூடிய விஷயத்திற்கு முடிவு கட்ட வேண்டு மென்றால் மத்திய - மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் தான் முடியும். 

மாறாக உள்துறை அமைச்சகம் உருவாக்க நினைக்கும் திட்டத்தின்படி, சில அதிகாரங்களைத் தன் வயப்படுத்திக் கொள்வதால் மட்டுமே பயங்கரவாதம் என்ற பேரச்சம் தரும் அபாயத்தின் வேர்களை அழிக்க முடியாது.

உள்துறை அமைச்சகம் நினைப்பது போல நவீன புலனாய்வு அமைப்புகள், அதற்கான வசதிகள், காவல் துறையை நவீன மயமாக்குவது, பயிற்சித்திட்டங்கள் அல்லது ஒருங்கிணைந்த உளவு முறைகள். சிலரை கைது செய்வதற்கான அதிகாரம், ஆகிய வற்றால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

பயங்கர வாதத்தை ஈவு இரக்க மற்ற முறையில் ஒழித்து கட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயம் குறித்து ஏற்கனவே பல மாநில முதல்வர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயங்கவாதத்தை எதிர்த்துப்போராடு வது என்பது தேசத்தின் முன்னுள்ள முன்னுரிமை விஷயமாகும், உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தால் மட்டுமே இப்பிரச்சினை குறித்து முடிவு எடுக்க முடியாது.

அரசியல் சட்டப்பிச்சினைகள் உட்பட பல விஷயங்கள் இதன் முன் உள்ளதால் குறிப்பாக பல மாநில முதல்வர்கள் தங்களிடம் இது குறித்து நேரிடையாகவே கருத்து தெரிவித்து இருப்பதால், தாங்கள் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டினால் இது குறித்து முடிவு எடுக்க முடியும். வரும் 12-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் கூட்டம் நடப்பதை நான் தடுக்கவில்லை, மாறாக இந்த கூட்டத்தில் மாநில உள்துறை செயலாளர் போலீஸ், டி.ஜி.பி., ஆகியோருடன் இணைந்து பங்கேற்கும் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளரை பணித்துள்ளேன்.

இருந்தாலும் நான் முன்னே கூறியுள்ள படி, மாநில முதல்வர்களின் கூட்டத்தைத் தாங்கள் காட்டி  முதல்வர்களின் ஆலோசனைத் தெரிந்து பற்றி பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

 அதற்கு முன்னதாக, இதற்கான பின்னனி அறிக்கை ஒன்றை தயாரித்து மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். மாநிலங்கள் அவற்றை பரிசீலித்து, தேவைப்பட்டால் தங்களின் மாற்றுத்திட்டங்களையும் இணைந்தது தாங்கள் கூட்டும் இந்தக் கூட்டத்தில் அவற்றை வைத்து ஆலோசிக்க வேண்டும்.

இந்த தேசிய முயற்சிக்கு மத்திய மாநில அரசுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல் படுவது என்பது குறித்து ஆலோசித்து உடனடியாக தாங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று கோட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்