முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளையர் கொன்ற சம்பவம்: போலீஸ் கமிஷனர் விளக்கம்

புதன்கிழமை, 7 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - வங்கி கொள்ளையரை கொன்ற சம்பவத்தில் தற்காப்புக்காகவே போலீசார் சுட்டனர் என்றும், அது என்கவுண்டர் அல்ல என்றும் உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கேட்டும். சி.பி.ஐ. விசாரணை கேட்டும் வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்ப தாவது:-

வங்கி கொள்ளையர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் புகழேந்தி கூறுவது சட்டப்படி சரியானதல்ல.

இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் மனுதாரர் இவ்வழக்கை தாக்கல்  செய்துள்ளார்.  இச்சம்பவம் என்கவுண்டர் சம்பவம் அல்ல.

சென்னையில் பட்டப்பகலில் 2 வங்கிகளில்  கொள்ளையடித்தவர்கள் துப்பாக்கிகளுடன் வங்கி  ஊழியர்களையும். பொது மக்களையும் மிரட்டியது அனைவரும் தெரிந்த ஒன்றே. அப்படிப்பட்ட நபர்கள் வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்கி இருந்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்புடன். இருக்குமாறு எச்சரித்தனர். கொள்ளையர்களை விசாரிக்க சென்ற போலீசாரை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் அவர்களிடம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பேசியபடி கதவைத் திறக்க முயற்சித்தனர். ஆனால் அதையும் மீறி கொள்ளையர்கள் போலீசாரை நோக்கி சுட்டனர்.

இதனால் வேறு வழியில்லாமல் போலீசார் திருப்பிச்சுட்டனர். பொதுமக்களைகாக்கவும், தங்களைத் தானே தற்காத்துக் கொள்ளவும் திருப்பிச்சுட்டதில் 5 கொள்ளையர்களும் பலியானார்கள். அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனான வினோத்குமாரை வங்கி ஊழியர்கள் இருவர் அடையாளத்தை உறுதி செய்தனர். அனைவரதுகையில் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. பத்திரிக்கைகளில்தான் அவர்கள் பொம்மை துப்பாக்கி வைத்திருந்ததாக வந்த தகவல் தவறானது.

பலியான 5 பேரும் கொள்ளையர்கள்தான். அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகள்  போலியானவை. மனுதாரர் புகழேந்தி மக்கள்  நலனுக்காக இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. விளம்பரத்திற்காக அம்மனுவை தாக்கல் செய்துள்ளார். கொள்ளையர்களிடம் இருந்து 5 பிஸ்டல் துப்பாக்கி, 1 ரிவால்வர் துப்பாக்கி, சிறியரக துப்பாக்கி, ரூ.13 லட்சம் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

மனித உரிமை ஆனையத்தின் வழிகாட்டு விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்திற்கும் முதல்கட்ட விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மனுதாரர் புகழேந்தியின் கோரிக்கை மனுவும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே மனுதாரர் புகழேந்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வங்கி கொள்ளையர்கள் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து சதீஷ்குமார். சதாசிவம் ஆகியோர் தங்களையும் இந்த வழக்கில் சேர்க்க கேட்டு மனுதாக்கல் செய்தனர். மனித உரிமை ஆணைய விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணை நிலுவையில் இருக்கும்போதே வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தததல்ல என்று கூறி இருந்தனர்.

இவ்வழக்கில் மற்ற போலீஸ் அதிகாரிகள் சார்பில்கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்