முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க பிரதமருக்கு கடிதம்

புதன்கிழமை, 7 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - தமிழர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தி படுகொலை புரிந்த இலங்கையை போர்க் குற்றவாளியாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை போரின் இறுதி தருணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது தாக்குதலை தொடுத்து கொடூரமான சித்தரவதை நடவடிக்கைகளை இலங்கை ராணுவம் நடத்தியது. இந்த போர்குற்றம் தொடர்பாக ஐ.நா. ஒரு மனித உரிமை குழுவை நியமித்து ஆய்வு செய்தது. அதன் அறிக்கை ஏற்கனவே ஐ.நா.வின் மனித உரிமை கழகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிங் கூட்டம் ஜெனீவாவில் இம்மாதம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு நடத்திய போர்க்குற்ற நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் எதிர்த்து செயல்பட உள்ளன. 

இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இந்த கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு ஏறக்குறைய 80 சதவீத நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்தியா இவ்விஷயத்தில் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக கருத்து தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள இலங்கை அமைச்சர் இந்தியா எங்களை ஆதரிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 

இச்சூழ்நிலையில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்தியா செயல்பட உள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

இச்சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு கடிதத்தை நேற்று எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தங்களுக்கு கடந்த 14.6.2011 அன்றும் 25.6.2011 அன்றும் எழுதிய கடிதத்தை நினைவு கூற விரும்புகிறேன். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 8.6.2011-ல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்கள் மீது போர்க்குற்றம் இழைத்தற்காக அதைக்கண்டித்தும், ஐ.நா.வில் கொண்டு வரவுள்ள போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளித்து, மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி உள்ளேன். சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களை மறு குடி அமர்த்தி, மறு சீரமைத்து புதிய வாழ்க்கையை அவர்களுக்கு கெளரவமாக அளிக்கவும், சிங்களவர்களுக்கு இணையாக அரசு சட்ட உரிமைகளை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்கும் படி நான் அந்த கடிதத்தில் கூறியிருந்தேன்.

ஆனால் சமீபத்தில் மாறுபட்ட செய்திகள் வந்துள்ளன.

ஜெனீவாவில் கூடும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்குப்பதில், வழக்கமாக நடக்கும் நடைமுறையின் படி,  உலகளவிலான, விஷயங்களை ஆய்வு செய்யும் பிரிவில் ஒன்றாகவே இலங்கை விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுவதாக ஊடக செய்திகளிள் அடிபடுகின்றன. இந்தியாவின் இத்தகைய செயலானது இலங்கையை இந்தியா நேரிடையாக ஆதரிப்பதாகவே கருதே  வேண்டியுள்ளது. இந்தியாவின் இந்த செயல் துர திஷ்ட வசமானதாகும்.

ஆகையால் நான் ஏற்கனவே வலியுறுத்தியது போல மனித உரிமைக்கவுன்சிலின் கூட்டத்தில் அமெரிக்க பின்னணியில் உள்ள தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரித்து இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்விஷயத்தில் உடனடியாக தங்களின் மேலான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். 

இவ்வாறு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்