முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடராஜன் மீது 3-வது நிலஅபகரிப்பு வழக்கு

புதன்கிழமை, 7 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

தஞ்சை.மார்ச்.8 - நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. இந் நிலையில் நடராஜன் மற்றும் 6 பேர் மீது புதிதாக ஒரு நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமாக 15,000 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டதாக நடராஜன், அவரது சகோதரர் சாமிநாதன் உள்ளிட்ட 7 பேர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ராமலிங்கம் புகார் செய்தார்.

 

இதையடுத்து நடராஜன், வெங்கடேசன், குபேந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் நடராஜன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நடராஜனுக்கும், சம்பந்தப்பட்ட நிலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நடராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ராமலிங்கத்தின் நிலத்துக்கும், அந்நிலம் குறித்து ஒப்பந்தம் செய்த அறக்கட்டளை நிர்வாகி மகாதேவனுக்கும், எனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இந்நிலத்தில் நான் எவ்விதமான உரிமையும் கோரவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

 

இதையடுத்து நீதிபதி சுதந்திரம் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். சாமிநாதன், நடராஜன் தவிர மற்றவர்கள், வழக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி 2 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இந் நிலையில் நடராஜன் மற்றும் 6 பேர் மீது தஞ்சை போலீசார் புதிதாக ஒரு நில அபகரிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். ஆல்பர்ட் என்பவர் தனது 1.5 ஏக்கர் நிலத்தை நடராஜன் மற்றும் அவரது ஆட்கள் 6 பேர் அபகரித்து விட்டதாக தஞ்சை நில அபகரிப்பு தடுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து நடராஜன் மீது இந்த நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்