முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் வழக்கு: செயலாளர் பதில் மனு தாக்கல்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை.மார்ச்.10 - எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக கூறி 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து விஜயகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் பதில் மனு தாக்கல் செய்ய சட்டமன்ற செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் சார்பாக அரசு ப்ளீடர் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். பதில் மனுவில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் முன்னிலையில் விஜயகாந்த் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். இது குறித்து விசாரிக்க உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் ஜெயகுமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து உரிமைக்குழு விசாரணை நடத்தியது. அதில் விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த தேமு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் இடம் பெற்றுள்ளனர். உரிமைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை. இதனால் உரிமைக்குழு தனது முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது.

 

அதன் அடிப்படையில் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தி அவருக்கு 10 நாள் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பு அவையில் இருந்த தேமு.தி.க.வைச்கேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே எதிர்ப்பு தெரிவித்தார். உரிமை குழு முன்பு தங்கள் தரப்பு வாதத்தை வைக்க வாய்ப்பு கொடுத்தும் அதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தண்டனையை குறைக்க வேண்டும் என்று தான் பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார். ஆனால் தண்டனையை ரத்து செய்ய விஜயகாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜயகாந்த்துக்கு தண்டனை வழங்க சட்டமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை இழந்து விட்டார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பறித்தது சரியானது தான். இதில் எந்த தவறும் இல்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்