முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.11 - திங்களன்று தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். ஐந்து மாநிலத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள சூழலில் நாளை, திங்களன்று (12-ந்தேதி) நாடாளுமன்றம் கூடுகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலையேற்றம் ஆகியவற்றுடன், சமீபத்தில் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உச்சநீதிமன்றம், முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசன்சுகளை ரத்து செய்துள்ளதால், அதுபற்றிய குழப்பமும், மத்திய அரசை வாட்டுகிறது. ஏலத்தின் மூலம் புதிய லைசன்ஸ்சுகளை அளிப்பதா ன்பது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திகைத்து வருகிறது. 

இவற்றுடன் சமீபத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களும் முடிந்துள்ளது. இதில் மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியைத்தக்க வைத்துக் கொண்டுள்ளது. உத்திரகாண்டில் ஆட்சியைப்பிடிக்க குதிரை பேரத்தை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. பஞ்சாபிலும், கோவாவிலும் எதிர்கட்சியான பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மிகப்பெரிய மாநிலமான உ.பியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தலில் பலத்த அடியை மக்கள் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடங்குகிறது. இப்பிரச்சினைகளின் எதிரொலி நாடாளுமன்றக் கூட்டத்திலும் இருக்கும். இதையுணர்ந்த மக்களவைத் தலைவர் மீராகுமார், மக்களவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். இருந்தாலும் இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆகையால் இந்த நாடாளுமன்றக் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சவால் மிகுந்ததாகவே இருக்கும்.

தமிழக பிரச்சனைகள்: இந்நிலையில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அவ்வப்போது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் எடுத்துரைத்துள்ளார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை மாநிலங்களில் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தமுறை மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதையும், மாநில அரசுகளின் கையில் உள்ள அதிகாரங்களில் தலையிடுவதையும் எடுத்துக்கூறிய முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து ஒருமித்த முடிவை எடுக்க மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டவும், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு உள்துறை அமைச்சர் மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோர் கொண்ட கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இதற்கும் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துடன் பெருந்தன்மையாக, தமிழக உயரதிகாரிகளை இக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா போல ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட முதல்வர்கள் இந்த மையம் ஏற்படுவதை எதிர்த்துள்ளனர்.

மாநிலங்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு செயல்படுவதும், நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கடும் மின்வெட்டு உள்ள நேரத்தில் பிறமாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற்றாலும், மின்பாதை சரியாக இல்லாததால் மத்திய அரசின் கிரிட்டிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காமல் உள்ளது. மேலும் தமிழக அரசு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜெனீவாவில் இன்று கூடும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரிக்கும் நிலையில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிறநாடுகளின் உதவியுடன் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் முதல்வர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

இவற்றுடன் ஏற்கனவே சத்துணவுத் திட்டம் மற்றும் விலையில்லாத பொருட்கள் வழங்குவது, பொது விநியோக முறையை சீராக நடைமுறைப்படுத்துவதில் முன்னேறிய நிலையிலுள்ள தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அவசியம் இல்லை என்பதையும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 

எம்.பி.க்களுடன் ஆலோசனை: இதுபோன்ற பல பிரச்சனைகளில் தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றாமல் காலம் தள்ளி வருகிறது. இச்சூழலில் நாளை கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பிக்கள் எவ்வாறு நடந்துகொள்வது, என்ன என்ன பிரச்சனைகளை எழுப்புவது உட்பட பலவிஷயங்களை குறித்து பேச அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களை எம்.பிக்கள் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டினார். இந்த கூட்டம் சுமார் ஒருமணி நேரம் நடந்து. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 12.3.2012 அன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில், அவரது இல்லத்தில் நேற்று கழக நாடாளுமன்ற மக்கள் அவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத் தொடரில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.  

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்