முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன் கோவிலில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.14 - சங்கரன் கோவிலில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று சங்கரன்கோவில் செல்ல உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார், அங்கிருந்து சங்கரன்கோவில் தொகுதிக்கு செல்கிறார். அங்கு அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் இந்த தொகுதிக்குட்பட்ட திருவேங்கடம் தொடங்கி தேவர்குளம் வரையிலும் 9 இடங்களில் முதல்வர் பேசி வாக்கு சேகரிக்கிறார். சங்கரன்கோவில் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான சொ.கருப்பசாமியின் மறைவையொட்டி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பிஜேபி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளுமாக 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இம்மாதம் 18ந் தேதி அன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று 21ந் தேதி  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.  வருகிற 16ந் தேதி மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.  பிரச்சாரத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்துத்  அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சங்கரன்கோவில் தொகுதிக்கு செல்லும் முதலமைச்சர் பிற்பகல் தொடங்கி இரவு வரையிலும் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்வியை ஆதரித்து வேன் மூலம் பிரச்சாரம் செய்கிறார்.

முதலாவதாக திருவேங்கடம் பஜாரில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் அவர் அங்கிருந்து புதுப்பட்டி, வெள்ளாளகுளம் விலக்கு, குறிஞ்சாகுளம் வழியாக குருவிக்குளம் சென்று அங்கு மக்களிடையே உரையாற்றி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார்.

அங்கிருந்து வாகைக்குளம் வழியாக நாலுவாசன்கோட்டை, அழகனேரி, செவல்குளம் விலக்கு, சிதம்பராபுரம் விலக்கு வழியாக மலையாக்குளம் சென்று அங்கு மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.இதையடுத்து ராமநாதபுரம் விலக்கு, பாட்டத்தூர், சங்கரன்கோவில் புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் தெற்கு ரத வீதியில் உரையாற்றி அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் திருநெல்வேலி ரோடு, வடக்கு பெட்ரோல் பங்க், பெரிய கோவிலான்குளம் விலக்கு, சண்முக நல்லூர் விலக்கு, ராஜீவ் நகர் பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் முதலமைச்சர் அதையடுத்து குருக்கள்பட்டியில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

பின்னர் பிஎம்டி கல்லூரி, திருமலாபுரம் வழியாக பனவடலிசத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கு மக்களிடையே பேசி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். இதை தொடர்ந்து மருக்காலங்குளம் விலக்கு, மேசியாபுரம் விலக்கு வழியாக வன்னிகோனேந்தல் கிராமத்திலும், அடைக்கலாபுரம் வழியாக வந்து இறுதியாக தேவர் குளம் மெயின் ரோட்டிலும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களிடையே உரையாற்றி அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவு திரட்டுகிறார். திருவேங்கடம் தொடங்கி தேவர் குளம் வரையிலும் ஒரே நாளில் 9 இடங்களில் பேசி அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கிறார். பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்