முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரச்சனை: அ.தி.மு.க. எம்.பி.க்கள் போர்க்கொடி

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 14 - இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ராஜ்யசபை நேற்று 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் ஏராளமானோர் சிங்கள ராணவத்தினரால் கொல்லப்பட்டனர். ஈவு இரக்கமற்ற முறையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது போர்க்குற்றம் என்றும் எனவே இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு மனித உரிமைக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தநிலையில் ஐ.நா. மனித உரிமை குழு கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மற்றும் பல முக்கிய தலைவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில்  இந்த தீர்மானம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இந்தச் சூழ்நிலையில் ராஜ்யசபை நேற்று காலை கூடியதும் கேள்விநேரத்தின்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறதா, இல்லையா என்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ராஜ்யசபை நேற்று நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு சபை மீண்டும் கூடியபோது இதே பிரச்சனையை முன்வைத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பிரதமர் அறிக்கை அளித்தே ஆகவேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பியபடி சபையின் மையப் பகுதியை நோக்கி விரைந்தனர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சார், பவன்குமார் பன்சால், இந்த பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை (இன்று)அறிக்கை தாக்கல் செய்வார் என்று கூறினார். 

ஆனால் அவரது பதிலை அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சபையில் தொடர்ந்து அமளி நீடித்ததால் ராஜ்யசபையின் துணைத்தலைவர் ரகுமான்கான் சபையை நண்பகல் 12.15 மணிவரை ஒத்திவைத்தார். பிறகு சபை மீண்டும் கூடியபோதும் இதே பிரச்சனையை முன்வைத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள், ராஜ்யசபை குழுத்தலைவர் மைத்ரேயன் தலைமையில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தனது அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை எழுப்பினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபையின் துணைத் தலைவர் ரகுமான்கான், அரசு தனது அறிக்கையை புதன் கிழமை தாக்கல் செய்யும் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அ.தி.மு.க. எம்.பி.க்கள், இப்போதே அறிக்கைய தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அமளி அதிகரிக்கவே சபையை மூன்றாவது முறையாக பிற்பகல் 2 மணி வரை துணைத் தலைவர் ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்