முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.15 - கடந்த நான்காண்டுகளாக அறிவிப்பு நிலையிலேயே இருந்த பல மின்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உறுதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் ​ 2012 அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா,  தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் முதல் இடமான திருவேங்கடம் பஜார் என்ற இடத்தில் கழக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து ஆற்றிய உரை வருமாறு:-

முன்னாள் அமைச்சர் கருப்புசாமியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கியவர். உங்களுடைய அன்பைப் பெற்றிருந்தார். அவருடைய இடத்தை நிரப்புவதற்காக அன்புச் சகோதரி முத்துச்செல்வி இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவரது தந்தை சங்கரலிங்கம் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இந்தத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கழக வேட்பாளர் முத்துச்செல்வி பொறியியல் பட்டம் பெற்றவர்.  உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்.  கருப்பசாமியைப் போலவே அன்போடும், எளிமையோடும் பழகக் கூடியவர். என்னுடைய வேண்டுகோளினை ஏற்று, அன்புச் சகோதரி முத்துச்செல்வியை நகர மன்றத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவரை சட்டமன்றத்திற்கு அனுப்புமாறு உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ளவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

நான் பொறுப்பு ஏற்றவுடன் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி;

முதியோர் உதவித் தொகை 1,000 ரூபாயாக அதிகரிப்பு; திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000/​ ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கக் காசுடன் 50,000/​ ரூபாய் உதவித் தொகை; முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;

குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு;

விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் எனது அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதுமட்டும் அல்லாமல், மாணவ​மாணவியர், நலன் காக்கும் வகையில் 1, 2 மற்றும், கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு மடிக் கணினி;

10 முதல் 12​ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை; விலையில்லா சைக்கிள்; பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகள்; காலணிகள் ஆகியவை உங்கள் அன்புச் சகோதரியின் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இவையன்றி ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கணித உபகரணப் பெட்டி; வண்ணப் பென்சில்கள்; புவியியல் வரைபடங்கள் ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். தமிழ் நாட்டில் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் ஆடுகள், கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  சமூக நீதியை காக்கும் வகையில், வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிக்க நான் வழிவகை செய்துள்ளேன்.   சட்டம் ​ ஒழுங்கைப் பொறுத்த வரையில், சட்ட விரோதிகளின் ஆட்சி என்ற நிலை மாறி, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு உள்ளது.  பொதுமக்களின் நண்பனாக காவல் துறை செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. மின்சாரத்தைப் பொறுத்த வரையில், முந்தைய தி.மு.க. அரசின், நிர்வாக சீர்கேடு மற்றும், மெத்தனப் போக்கு காரணமாக, தமிழகத்தில் மின் பற்றாக்குறை, தொடர்ந்து நிலவி வருகிறது. இந்தப் பற்றாக்குறையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வட சென்னை விரிவாக்க மின் திட்டம் யூனிட்​1;  500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் கூட்டு முயற்சி மின் திட்டம்​ஐ; 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் கூட்டு முயற்சி மின் திட்டம்​ஐஐ; 500 மொகாவாட் மின் திறன் கொண்ட மூன்றாவது யூனிட்; 600 மொகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது நிலை; 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையத்தின் திட்டம் யூனிட் ​ ஐஐ ஆகிய மின் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1950 மெகாவாட் மின்சாரமும்; அக்டோபர் மாதத்தில் மேலும் 600 மெகாவாட் மின்சாரமும் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளோம்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மின் பற்றாக்குறை படிப்படியாக குறைந்துவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்த இடைப்பட்ட காலத்தில், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கலாம் என்று நினைத்தாலும், மின் தொடர் நெருக்கடி காரணமாக அதை பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.  மேலும், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகாலமாக அறிவிப்பு நிலையிலேயே இருந்த உடன்குடி அனல் மின் திட்டம் தமிழ்நாடு அரசின் திட்டமாக செயல்படுத்தப்படும்.  இன்னும் பல மின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  மின்சார உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில் நானே தனிக் கவனம் செலுத்தி வருகிறேன்.  மின் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இலங்கை இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கவும்; அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும்; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.  ஆனால், மத்திய அரசு இது நாள் வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் முன்பு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கப் போவதாக செய்திகள் வருகின்றன.  இது தான் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் மீதுள்ள அக்கறை.

தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் என்ற குறிக்கோளுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தத் தொகுதியில் அமைந்துள்ள மனோ கல்லூரி பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியுமின்றி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.  சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று கடந்த ஆண்டு என்னிடம் நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். உடனே அதனை நிறைவேற்றுமாறு நான் உத்தரவிட்டேன். தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கலைக் கல்லூரி அமைத்துத் தரப்பட வேண்டும்; பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தரப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்; என பல்வேறு கோரிக்கைகள் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் மக்கள் சங்கடம் இன்றி, சகல வசதிகளுடன் சந்தோஷமாக வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் நாங்கள் நிச்சயம் ர்த்தி செய்வோம். மாற்றம் தந்த உங்களுக்கு ஏற்றம் தரும் வகையில் செயல்பட்டு வரும் உங்கள் அன்புச் சகோதரியின் அரசுக்கு, இந்த இடைத் தேர்தலில் உங்கள் பேராதரவினை நீங்கள் நல்க வேண்டும்.  நில அபகரிப்புக்கு பெயர் போன திமுக​விற்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழக வேட்பாளர் அன்புச் சகோதரி முத்துச்செல்விக்கு, எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு என்று கூறி விடை பெறுகிறேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்