முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, மார்ச் 15 - முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலுக்கு பிரச்சாரத்திற்காக வருகைதந்தார்.அவருக்கு மேளம்,தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக நேற்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 1 மதியம் 1 மணிக்கு திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திரபாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்ச்சிக்கப்பட்ட ராஜகிளி வழங்கப்பட்டது. மேலும் 64 பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் திருவேங்கடம் மெயின் பஜாரில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர்முத்துசெல்வியை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கி மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் புதுப்பட்டி, வெள்ளாளன்குளம் வழியாக அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் மக்கள் வெள்ளத்தில் நீந்திய படியே சங்கரன்கோவில் வருகை தந்தார். அங்கு பாட்டத்தூர், புதியபஸ்நிலையம் விலக்கு, தெற்குரதவீதி, தேரடி திடல் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக முதல்வர் சங்கரன்கோவில் வருகையையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் நையாண்டிமேளம், கரகாட்டம்,மேள தாளத்துடன் 4 ரத வீதிகளிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். மற்றும் ஆங்காங்கே கழக தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் வாக்கு சேகரித்தனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சேலம் மாவட்ட தொண்டர்கள் தாரைவாத்து இசைக்கருவி மூலம் இசைத்து தேரடி திடலில் முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர். மேலும் இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நகரெங்கம் நடைபெற்றது. தேரடி திடல் மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது. தேரடி திடலில் பேசிய முதல்வர் அங்கிருந்து குருக்கள்பட்டி வருகை தந்தார். அங்கு அவருக்கு செண்டை மேளம் முழங்க பூரண கும்பத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.  குருக்கள்பட்டி முழுவதும் குருத்தோலை மற்றும் கட்சி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பணவடலிசத்திரம் சென்ற அவருக்கு செண்டை மேளம் முழங்க, பூரணகும்பத்துடன் பெண்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.அங்கிருந்து வன்னிக்கோனேந்தல் சென்ற அவருக்கு செண்டை மேளம், வாடிப்பட்டி மேளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இறுதியாக தேவர்குளம் சென்றார். அங்கு 6 யானைகள் அணிவகுப்பு மூலம் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் பிரச்சாரத்தை மாலை 5.57 மணிக்கு நிறைவு செய்தார். பின்னர் தேவர்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார்.

முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் வருகையையொட்டி சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் செல்லும் வழியெல்லாம் மக்கள் குவிந்திருந்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முதல்வர் வருகையால் சங்கரன்கோவில் தெகுதியே மக்கள் வெள்ளத்தில் திணறியது. மொத்தத்தில் முதல்வரின் வருகை ஆடித்தவசை நினைவு படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony