முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தில் 5 பேர் பலி

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஓசூர் மார்ச்.15 - கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாயினர். சென்னை அருகே உள்ள பெருங்குடி கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(35).சாப்ட் வேர் இன்ஜினியர். இவர் வேலை விஷயமாகவும், உறவினர் ஷாம் என்பவரை பார்க்கவும் சென்னையில் இருந்து நேற்று முன் தினம் மாலை காரில் பெங்களூரு புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி ஆர்த்தி(26), 1 1/2 வயது பெண் குழந்தை அஹானா, ஆர்த்தியின் சித்தி உமாதேவி(55), உமாதேவியின் மகள் பயோடெக் மாணவி திவ்யா(21) ஆகியோரும் சென்றனர். காரை ராஜேஷ் ஓட்டிச் சென்றார்.

பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் சூளகிரி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை சென்டர் மீடியத்தின் மீது மோதி நிற்காமல் எதிர் திசையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். லாரியை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள் ராதேஷ், ஆர்த்தி,உமாதேவி, குழந்தை அஹானா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவி திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரும் வழியிலேயே இறந்துபோனார்.  இதையடுத்து சூளகிரி போலீசார் பிணங்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.  இந்த விபத்தால் நள்ளிரவில் சுமார் 1 மணிநேரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்