முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் தென் கொரியா பயணம்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.23 - அணு பயங்கரவாதம் உட்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தென் கொரியாவில் நாளை 24 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை பயணம் செய்கிறார். இது தொடர்பாக வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் நிருபர்களிடம் கூறுகையில், தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் அழைப்பை ஏற்று சியோல் செல்லும் பிரதமர் அங்கு 26,27 ஆகிய நாட்களில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். 25 ம் தேதி பிரதமருக்கு தென் கொரிய அதிபரின் மாளிகையான புளூ ஹவுசில் வரவேற்பளிக்கப்படுகிறது. அதன் பிறகு பிரதமரும், அந்நாட்டு அதிபர் லீ மியூங்பக் இடையிலான பேச்சு வார்த்தை நடைபெறும். அதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்நிலை குழுவின் பேச்சுவார்த்தை நடைபெறும். மார்ச் 26 ம் தேதி காலையில் கொரியாவில் உள்ள தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்துகிறார். 

இந்திய பிரதமராக நரசிம்மராவ் இருந்த போது தென் கொரியாவுக்கு சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆவார். அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் முக்கியமாக அணு பயங்கரவாதம் குறித்து விவாதிக்கப்படும். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் கிடைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதில் விவாதிக்கப்படும். அது குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுவார் என்று வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்