முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை - ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.25 - தாய்மார்களுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் மூன்றும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பெண்களின் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்றும் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட 3 செண்ட் இடம் தரப்படும் என்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மனுத்தாக்கல் செய்வதற்காகவும், தனது பிரச்சாரத்தை துவக்குவதற்காகவும் நேற்று ஜெயலலிதா திருச்சி வந்து சேர்ந்தார். திருச்சியில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், 

இந்த அறிக்கையை முழுவதும் படிக்க முடியாது. அதனால் முக்கிய அம்சங்களை வாசிக்கிறேன் என்று கூறி விட்டு தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை வாசித்தார். முதலில் மைக் இல்லாமல் வாசித்த அவர், பின்னர் சில விநாடிகள் கழித்து மீண்டும் அறிக்கையை திரும்ப வாசித்தார். அவர் வாசித்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

* குடும்ப ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். 

 

* விலைவாசியை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும். 

 

* எத்தனால் எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்படும். 

 

* சொட்டுநீர் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

 

பருப்பு, மசாலா பொருட்கள்:

 

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 

 

* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். 

 

* புதிதாக ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 

 

* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். 

 

* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை, கிராமத்திற்கே வரும் வகையில் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும். 

 

பசுமை வீடுகள்:

 

* அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமுள்ள சூரியசக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் ரூ ஒரு லட்சம் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.  

 

3 செண்ட் இடம்:

 

* வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 செண்ட்டில் இடம் அளிக்கப்படும். 

 

* இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக்க தடையில்லா மின்சாரம் தரப்படும். 

 

* அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். 

 

* மின்சார திருட்டை தடுக்க பாதுகாப்பு படை அமைக்கப்படும். 

 

* வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற தெருவிளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். 

 

60,000 கறவை மாடுகள் இலவசம்:

 

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6 ஆயிரம் கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும். 

 

* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். 

 

* மாணவர்களின் புத்தக சுமை குறைக்கப்படும். அவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக தரப்படும். 

 

* மாணவர்கள் இடை நிறுத்தம் செய்வதை குறைப்பதற்காக 10, 12 ம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வழங்கப்படும். 

 

லேப்டாப் கம்ப்யூட்டர்:

 

* பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

 

* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும். கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர் நலன் காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

 

* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 

 

பேன், மிக்சி, கிரைண்டர்:

 

* தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி(ஃபேன்), ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் ஆகிய 3 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இது அல்லது அது என்றில்லாமல் மூன்றும் இலவசமாக தரப்படும். 

 

*  குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு கால சலுகையாக 6 மாத விடுமுறையும், 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும். 

 

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில், பக்கத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். 

 

* ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். அங்கு அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். 

 

* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும். 

 

கேபிள் டி.வி. அரசுடமை:

 

* தமிழகத்தில் கேபிள் டி.வி. தொழில் அரசுடமையாக்கப்படும். ஏகபோகம் தடுக்கப்படும். அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

 

* மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசு பணியில் ஒதுக்கப்படும்.

 

தாலிக்கு தங்கம்: 

 

* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன் தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு 4 கிராம்(அரை பவுன்) தங்கம் மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும். 

 

* இளநிலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000 ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும். 

 

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000 ரூபாய் அளவுக்கு உயர்த்தி வழங்கப்படும். 

 

* ஒவ்வொரு வருடமும் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் பள்ளிசார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும். 

 

* கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், தி.மு.க. மந்திரிகளாலும் பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

 

* சென்னை முதல் குமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

 

*திரையுலக பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்