முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, மார்ச் 25 - நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேட்டியளித்தார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை திருச்சியில் வெளியிட்டார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு.

கேள்வி : தி.மு.க. ஆட்சியில் சட்டம்,ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறீர்களா?

பதில் : அதிலென்ன சந்தேகம். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் அமைதியாக வாழவும் தயவு தாட்சண்யமின்றி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அ.தி.மு.க. அரசு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றும். 

கேள்வி : இலவச திட்டங்களை தி.மு.க அறிவித்தபோது குறை கூறினீர்கள். இப்போது நீங்களும் இலவசத் திட்டங்களை அறிவித்திருக்கிறீர்களே?

பதில் : எங்களுடைய தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி சார்ந்த அம்சங்கள் உள்ளது. தமிழகம் விரைவாக வளர்ச்சி பெறவும், அதற்குத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும். அரிசி போன்ற இலவசத் திட்டங்களோடு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் மற்றும் பல வளர்ச்சித்திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து அதன்மூலம் இலவசத் திட்டங்களை கொடுக்கிறோம்.

கேள்வி : தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதா?

பதில் :  அவர்களது நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வாக்காளர்களுக்கு கொடுக்கும் பண பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

கேள்வி : ஆண்டிபட்டியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு தொகுதி மாறிய காரணம் என்ன?

பதில் : ஆண்டிபட்டி தொகுதி சென்னையிலிருந்து அதிக தூரமாக உள்ளது. ஸ்ரீரங்கம் அருகே உள்ளது. இதனால் அடிக்கடி வந்து செல்வதற்கு சுலபமாக இருக்கும். இதைத் தவிர வேறு முக்கிய காரணங்கள் எதுவும் இல்லை.

கேள்வி : ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சிறப்புத் திட்டங்கள் உள்ளனவா?

பதில் : 234 தொகுதிகளிலும் சிறப்பான திட்டங்கள் உள்ளன. 

கேள்வி : அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில் : வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சென்ற இடங்களிலெல்லாம் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சியை விரட்டவேண்டும் என்றும், அ.தி.மு.கஆட்சி வரவேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி கடனாளியாக்கிய மைனாரிட்டி தி.மு.க ஆட்சியை அகற்றி தமிழக மக்களை மீட்கவும்,  மீண்டும் தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றவும் இந்த தேர்தல் அறிக்கையை அறிவித்திருக்கிறோம். என்னால் எதைச் செய்யமுடியுமோ அதைச் சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்திற்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் பெற்றுக் கொண்டார். அதேபோல் புதுச்சேரிக்கான தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட திருச்சி புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் சுப்பு என்ற சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்