முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு சார்பில் 13-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு கோலாகல விழா

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 8 - சித்திரை மாதத்தின் முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டாக காலம், காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரி, ஈழம் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில், 2008 -ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதத்தில் இருந்து தை மாதத்துக்கு மாற்றப்பட்டது.சித்திரை புத்தாண்டு என்ற வழக்கம், வடநாட்டு மன்னனால் கொண்டு வரப்பட்டதாக கூறி இந்த திடீர் மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.க அரசால் இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து 2008, 2009, 2010, 2011 -ம் ஆண்டுகளில் தமிழ்ப்புத்தாண்டு தினம் தை 1-ந்தேதி கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தி.மு.க. அரசால், தமிழ்ப் புத்தாண்டு தினம் மாற்றப்பட்டாலும் பலர் அதை ஏற்கவில்லை.சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி, சித்திரை மாதத்தில்தான் அவர்கள் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடினார்கள். அ.தி.மு.க.வும் இந்த மாற்றத்தை கடுமையாக எதிர்த்தது.மக்களின் மன உணர்வை சட்டத்தால் மாற்றி விட முடியாது என்று ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்ப்புத்தாண்டு மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி  மாற்றம் ஏற்பட்டதும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி மழைய அரசாணை ரத்து செய்யப்பட்டு, சித்திரை தமிழ்ப் புத்தாண்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பான விவாதம் சட்டசபையில் நடந்தபோது முதல் - அமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வை புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. என்றார். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு வருகிற சித்திரை தமிழ்ப் புத்தாண்டே முதல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்.எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டை மிக மிக கோலாகலமாக, விமரிசையாகக் கொண்டாட முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு லீப் வருடம் என்பதால் ஏப்ரல் 13 -ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வளர்ச்சித் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய சிறப்பையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட உள்ளது. விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்கும் கவியரங்கம், பட்டிமன்றம் , கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளன. அன்று மாலை நடக்கும் விழாவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். தமிழ் மொழி  வளர்ச்சிக்கும் கலாச்சாரத்திற்கும் சிறப்பான பங்களிப்பு செய்த தமிழ்ச் சான்றோர்ளுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா பரிசுகள், விருதுகள் வழங்கி கவுரவிக்கயுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்