முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் அபகரிப்பு: எ.வ.வேலு உள்பட 6 பேர் மீது புகார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, ஏப்.15 - திருவண்ணாமலை அருகே உள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாக முன்னாள் எம்எல்ஏ எ.வ.வேலு, திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த பி.முருகன் (39). நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரது வாரிசுதாரரிடம் நானும் எனது தம்பி சிவக்குமாரும் 27.06.2006 அன்று கிரையம் பெற்றோம். அதுமுதல் அந்த கிரைய சொத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த சொத்தை கிரையம் வாங்குவதற்கு முன் அந்த நிலத்தை குத்தகைக்கு பயிர் வைத்திருந்த குமார் என்பவர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு துணையுடன் சுப்பிரமணி, குமாருக்கு இரு உயில்களை எழுதிவைத்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்ததோடு குமாரின் மனைவி டில்லி பெயருக்கு மற்றொரு போலியாக தானசெட்டில்மெண்ட் ஆவணம் தயார் செய்து அதை எ.வ.வேலுக்கு விற்றுவிட்டனர். 

இந்த சொத்தை எ.வ.வேலு தன் பெயரில் கிரையம் பெறாமல் தனது பினாமியான சண்முகம் என்ற பெயரில் 26.09.2007 அன்று கிரைய ஆவணம் தயார் செய்து அப்போது தான் வகித்து வந்த உணவுத்துறை அமைச்சர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து சண்முகம் பெயரில் வருவாய்த்துறை ஆவணங்களில் உரிமை மாற்றம் செய்துவிட்டார். எ.வ.வேலு அபகரித்த இந்த சொத்தின் தற்கால மதிப்பு ரூ. 2 கோடி ஆகும். இதையறிந்த நானும் எனது தம்பி சிவக்குமாரும் தாசில்தாரிடம் ஆட்சேபனை மனு கொடுத்தோம். உடனே எ.வ.வேலுவின் மற்றொரு பினாமியும் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவருமான நாகசங்கர் பெயரிலும், அவரது தம்பி வழக்கறிஞருமான நாககுமார் பேரிலும் 03.03.2010 அன்று போலி கிரைய ஆவணம் தயார் செய்து சொத்தை அபகரித்துவிட்டனர். கொலைமிரட்டலும் விடுத்தனர். 

எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த புகார் மனுவில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, ஏந்தல் ஊராட்சி மன்ற தலைவர் நாகசங்கர், அவரது தம்பி வழக்கறிஞர் நாககுமார், குமார் அவரது மனைவி டில்லி மற்றும் சண்முகம் ஆகிய 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் போலியான உயில்சாசன நகல்களும் இந்த உயில்சாசனங்கள் போலியானவை என தடைய அறிவியல் ஆய்வகத்தில் கொடுக்கப்பட்ட சான்றிதழ் நகல்களும் மற்றும் போலி கிரைய பத்திரங்களும் புகார்மனுவோடு இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்