முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி செயல்பட உள்ள இடத்தில் நிதியமைச்சர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

போடி ஏப்.15  - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரி துவங்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் 2012-2013 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து கழக பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அரசு பொறியியல் கல்லூரிக்கு தேவையான வகுப்பறைகள், நூலகம், ஆய்வகக்கூடங்கள், மாணவ மாணவியர்களுக்கான விடுதிகள் செயல்படுவதற்கான தற்காலிகமாக இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

இதில் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தற்காலிகமாக அரசு பொறியியல் கல்லூரி செயல்படுவதற்கு தேவையான கட்டிடங்கள், வகுப்பறைகள், நூலகம், ஆய்வகக்கூடங்கள், மாணவ மாணவியர்களுக்கான விடுதிகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாராணி, வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் நாகமலை, அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், கம்பம் நகர்மன்ற தலைவருமான சிவக்குமார், போடி நகர்மன்ற தலைவர் பழனிராஜ், போடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சித்ராதேவி சுந்தர்ராஜ், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் சவீதா, துணைத்தலைவர் நித்யானந்தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

2012-2013-ஆம் கல்வி ஆண்டில் துவங்க உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அமைப்பியல் பிரிவில் 60 மாணவர்களும், இயந்திரவியல் பிரிவில் 60 மாணவர்களும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் 60 மாணவர்களும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவில் 60 மாணவர்களும், கணிணி அறிவியல் பிரிவில் 60 மாணவர்களும் சேர்த்து ஆக மொத்தம் 300 மாணவர்களுடன் இந்த கல்லூரி செயல்பட துவங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்