முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக, புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவரும், மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் முத்துக்குமரன். சாலை விபத்தில் அவர் உயிர் இழந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்டு வெற்றி பெற்றது.  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் இழப்பினால் ஏற்படும் காலி இடத்தை அந்த நாளில் இருந்து 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.

முத்துக்குமரன் எம்.எல்.ஏ. மறைந்து 20 நாட்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

நாடு முழுவதும் எங்கெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதை அறிந்து அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை தொகுதி மட்டும் தற்போது காலியாக உள்ளது. இதேபோல் ஆந்திராவில் 18 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதனால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் அங்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த மாநிலத்துடன் புதுக்கோட்டை தொகுதிக்கும் இடைத்தேர்தலை சேர்த்து நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

இதுபற்றி தேர்தல் ஏற்பாடுகள் ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமா

ர். எம்.எல்.ஏ. மறைவினால் புதுக்கோட்டை தொகுதி காலியாக இருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அன்றே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். அதனால் அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் முன் ஏற்பாடு பணிகளை தொடங்கி விட்டோம். தேர்தல் பணியில் யார் யாரை ஈடுபடுத்த வேண்டும் என முடிவு செய்து அதற்கான அதிகாரிகள், ஊழியர்களை தேர்வு செய்து தயாராக வைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். தேர்தல் தேதியை அறிவித்தால் சுமூகமாக தேர்தலை நடத்தி முடிப்போம். கடந்த தேர்தலில் பெயர் விடுபட்டவர்கள், இடம் மாறி சென்றவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். முந்திக் கொண்ட அ.தி.மு.க தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்து அக்கட்சி போட்டியிட புதுக்கோட்டைத் தொகுதியை அளித்தது.

இதனால் அப்போதே அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றம் இருந்தது. இதற்கிடையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தலின்போது இந்திய கம்யூ. கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருந்தது. இப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் இறந்ததால் எதிர்வரும் இடைத்தேர்தலில் போட்டியிட மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர்.

சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதி அறிவிக்கப்பட்டது போல இப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு போட்டியிட அ.தி.மு.க வாய்ப்பளிக்குமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.ராஜசேகரன் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கட்சி மாறினார். அதே போல பதிலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுப்பாளர்களில் ஒருவரும், முக்கிய தொழிற்சங்கத் தலைவரான பெரிய குமாரவேலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்பால் இழுத்துக் கொண்டது. 

இதனால் மாவட்ட அரசியலில் பெரும் வேகம் ஏற்பட்டது. இடது சாரிகளின் அரசியல் பலவீனமானதாக மாறியதை அ.தி.மு.க நிர்வாகிகள் உணர்ந்து கொண்டனர். ஆகையால் அ.தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட பலர் முன் வந்தனர். இதற்கு ஏற்றார் போல கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகளின் கூட்டம் தலைமையகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. 

இதையொட்டி போட்டியிட விருப்பம் தெரிவிப்போரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது. அ.தி.மு.க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். அ.தி.மு.க முந்திக் கொண்டது.

இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்படைந்ததையொட்டி, சங்கரன் கோவில் இடைத் தேர்தலைப் போலவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்பாகவே அ.தி.மு.க தனது வேட்பாளரை நிறுத்துவதிலும் முந்திக் கொண்டது. எப்போதுமே அரசியல் களத்தில் முந்தி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இப்போதும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, விரைவில் நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக, வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், பி.எஸ்.சி., புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணித் தலைவரும், புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருமான நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் புதுக்கோட்டைத் தொகுதி அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தற்போது கூட்டணி இல்லை என்பதையும் இந்த அறிவிப்பின் மூலம் முதல்வர் ஜெயலலிதா உறுதிப்படுத்தியுள்ளார்.

 

அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பற்றிய விவரங்கள்:-

 

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாத தொண்டைமான். இவர் மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் கார்த்திக் தொண்டைமான். இவருக்கு வயது 40. பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் 2005ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். கடந்த உள்ளாட்சி மன்ற தர்தலில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவருக்கு சுசீலா என்ற மனைவியும், சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago