முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயில் தேர் புதுப்பிப்பு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஏப். 26  - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் பங்குனி மாதம் வலம் வரும் பெரிய வைரத் தேர் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் முருகப் பெருமான், தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும். திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் கோயில் முன்பு நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பெரிய வைரத் தேரில் சுவாமி எழுந்தருள்வார். 

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரி வீதியில் தேரோட்டம் நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இத்தேரோட்டம் நடக்கும். இந்த தேரில் தராசுடன் முருகப் பெருமான் அமர்ந்திருப்பது உட்பட 400 க்கும் மேற்பட்ட சுவாமி சிற்பங்கள் உள்ளன. 600 ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்த இத்தேர், 40 டன் எடையும், 21 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்டது. இத்தேர் ஆரம்ப காலத்தில் இருந்து மரச் சக்கரங்களில் வலம் வந்தது. 1991 ல் தேரின் 6 மரச் சக்கரங்களும் மாற்றப்பட்டு 4 இரும்பு சக்கரங்கள், ரூ. 3.5 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேரோட்டத்தின் போது தேரின் அதிவேகத்தை கட்டுப்படுத்தவும், தடம் மாறாமல் செல்லவும், ரூ. 1.5 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டது. 

மிக பழமைவாய்ந்த இத்தேரின் அனைத்து பாகங்களும் பழுதடைந்துள்ளது. தேரோட்டத்தின் போது பாகங்கள் ஆட்டம் காண்கின்றன. அத்தேரின் சிலைகள் மற்றும் பாகங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக ஸ்தபி வேலாயுதம் தலைமையில் தேரின் அளவுகள் எடுக்கப்பட்டன. இதற்காக எஸ்டிமேட் தயாரித்து அரசு அனுமதி பெற்ற பின்னர் கோயில் நிதி மூலம் தேர் புதுப்பிக்கும் பணிகள் துவங்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்