முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் வழங்க கோரிக்கை

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.26 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கடும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை போக்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மின்சார உற்பத்தி நிலையங்களில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பல புதிய மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவ முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் மின்சாரத்தை திருடுவதை தடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய அரசு தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். காற்றாலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆங்காங்கே காற்றாலைகள் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு போராட்டங்கள் காரணமாக கூடங்குளத்தில் அணுமின்சார உற்பத்தி தொடங்குவது காலதாமதமாகிக்கொண்டே வந்தது. முதல்வர் ஜெயலலிதா இதை சாதுர்யமாக சமாளித்து கூடங்குளத்தில் விரைவில் மின்சார உற்பத்திக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். கூடங்குளம் தமிழகத்தில் இருப்பதாலும் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை போக்கவும் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அணுமின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:​ கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்தின் தேவைக்கே ஒதுக்க வேண்டும் என்று முன்பு கோரி இருந்தேன். எனது இந்த கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாக மார்ச் 31​-ந்தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவுபடுத்தும் அதே நேரத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்கள் தெரியவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இன்னும் சில நாட்களில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இந்த அணு உலையின் முதல் பிரிவில் அணு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற இருப்பதாக நான் அறிகிறேன். அப்படி எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கி முடிவடைந்து விட்டால்,  அடுத்த 20 நாளிலோ அல்லது சிறிது நாட்களிலோ, முதல் யூனிட்டில் இருந்து மின் உற்பத்தி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் என்னுடைய கோரிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எங்கள் மாநிலத்தின் முற்றிலும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை நீnullங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களிடமிருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்