முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - மதுபான சில்லைரை விற்பனைக் கடைகளில் கணக்குகள் சரிவர பராமரிப்பதற்கு ஏதுவாக பில்லிங் இயந்திரங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

முதலமைச்சரின் ஆணைப்படி, கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் தீமைகளை பொதுமக்களுக்கு விளங்கிட விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படும். விழிப்புணர்வு பேரணிகள், தெருமுனை நாடகங்கள் மற்றும் கருத்தரங்குகள் மாநிலம் முழுவதும் இதற்கென நடைபெறும். சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.64 லட்சம் நிதி, நடப்பு ஆண்டில் ஒதுக்கப்படும்.

மேலும், மாநில அளவில், இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு ரூ.36 லட்சம் நிதி வழங்கப்படும். இவ்வாறு, சாராயம் மற்றும் மதுபான வகைகள் பருகுவதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மொத்தம் ரூ.1 கோடி செலவிடப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தொழிலைத் தொடராமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும், முதலமைச்சரின் ஆணைப்படி, இவ்வாண்டு ரூ.5 கோடி மறுவாழ்வு நிதி உதவி, மானியமாக வழங்கப்படும். இதன் மூலம் அக்குடும்பங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்து தங்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்திக்கொள்ள முடியும். நிதி உதவி பெறக்கூடிய பயனாளிகளைத் தேர்தெடுக்க மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக முதுநிலை மேலாளர் மற்றும் உதவி ஆணையர் ( ஆயத்தீர்வை) ஆகியோர் அடங்கிய மறுவாழ்வு குழு செயல்படும்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் எரிசாராயம் மற்றும் போலி மதுபானம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக எட்டு மதுவிலக்கு சோதனைச் சாவடிகள், வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்டியான்பேட்டை, திருவலம் மற்றும் மாதகடப்பார் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் பொன்பாடியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருவிநாயனபள்ளியிலும், ஈரோடு மாவட்டத்தில் ஆசனூரிலும், சென்னை மாநகரத்தில் மொண்டியம்மன் நகரிலும் புதிதாக அமைக்கப்படும்.

தமிழ் நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 7,785 மேற்பார்வையாளர்களும், 16,826 விற்பனையாளர்களும், 4,039 மதுக்கூட உதவியாளர்களும் ஒப்பந்த/தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு முறையே, ரூ.500, ரூ.400 மற்றும் ரூ.300 மாத ஊதிய உயர்வு செப்டம்பர், 2011 முதல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டு அதன்படி அவர்கள் உயர்த்தப்பட்ட ஊதியம் பெற்றும் வருகிறார்கள். இந்த ஆண்டும் மீண்டும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி மேற்பார்வையாளர்களின்  தொகுப்பூதியத்தில் மாதமொன்றுக்கு ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். விற்பனையாளர்கள் மற்றும் மதுக்கூட உதவியாளர்களின் தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு முறையே ரூ.400 மற்றும் ரூ.300 உயர்த்தப்படும். மேற்குறிப்பிட்ட ஊதிய உயர்வுகள் சென்ற ஆண்டைப் போலவே நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள 28,650 தொகுப்பூதிய பணியாளர்கள் அனைவரும் பயன்பெறுவர். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.14.16 கோடி கூடுதலாக செலவிடப்படும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லைறை விற்பனைக் கடைகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த பறக்கும் படைகள் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் இயங்கும். இதற்காக ஆட்சியர் நிலையில் 5 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், தமிழ்நாடு முழுவதும் 41 மதுபானக் கிடங்குகளை நிர்வகித்து வருகிறது. இவற்றில் 25 கிடங்குகள் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வருகின்றன. எஞ்சிய 16 கிடங்குகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றுள் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசையிலும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்திலும், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியிலும் புதிய கிடங்குகள் கட்ட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இம்மூன்று கிடங்குகளைக் கட்டுவதற்கு ரூ.8 கோடி செலவிடப்படும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான விற்பனைக் கடைகளில் பற்றுச் சீட்டுகள் கையினால் எழுதப்பட்டு வழங்கப்படுவதினால் ஏற்படும் தாமதம் மற்றும் தவறுகளைத் தவிர்க்கும் நோக்கத்தோடும், சரக்கு இருப்பு, விற்பனை சம்பந்தமான கணக்குகளை எளிதாக பராமரிப்பதற்கும், திடீர்த் தணிக்கைக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு பற்றுச் சீட்டு இயந்திரங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். முதற்கட்டமாக 2500 கடைகளும் இந்த இயந்திரங்கள் வழங்கப்படும். 2500 பற்றுச் சீட்டு இயந்திரங்கள் கொள்முதல்  செய்வதற்கு 5 கோடி செலவிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்