முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபில்சிபல் பதவி விலக டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே.13​- சி.பி.எஸ்.சி. 11 வகுப்பு பாட புத்தகத்தில் அரசியல் சட்டதந்தை அம்பேத்கரை அவமதித்து, கேலிசித்திரம் வெளியான சம்பத்தில், அதற்கு பொறுப்பேற்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் ராஜினாமா செய்ய வேண்டும் என, பா.ம.க. நிறுவனர். டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:​

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தின்படி வெளியிடப்பட்டுள்ள 11​ம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் பாடநூலில் இந்திய அரசியல் சட்ட தந்தை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை அம்பேத்கர் நத்தை வேகத்தில் செய்வதை போன்றும், அப்பணியை விரைவுப்படுத்தும்படி அம்பேத்கரை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சாட்டையால் அடிப்பது போன்றும் அந்த கேலிச் சித்திரம் அமைந்துள்ளது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அம்பேத்கரை அவமதிக்கும் பாடநூலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தியதை அடுத்து அந்த பாடநூல்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கிறார்.

கபில்சிபல் பதவி ஏற்ற நாளிலிருந்தே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அவமதிக்கும் வகையிலும் அவர்களின் நலனுக்கு எதிரான வகையிலும் செயல் பட்டு வருகிறார். அதன் உச்சக்கட்டமாகத்தான் அரசியல் சட்ட தந்தை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இப்படி ஒரு செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமான மத்திய அமைச்சர் கபில்சிபல் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த பாடநூலை தயாரித்தவர்கள் மீதும், வெளியிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்