முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் கையாடல்: பெண் பிடிஓ உள்பட 13 பேர் சஸ்பெண்ட்

வியாழக்கிழமை, 24 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.24 - ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணம் கையாடல் தொடர்பாக பெண் பிடிஓ, இன்ஜினியர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புரம் ஊராட்சி தலைவர் இயேசு பிள்ளை. இவர் காஞ்சிபுரம் கலெக்டர் அனிஷ் சாப்ராவிடம் கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய பொது நிதியில் இருந்து 20 கிராமங்களில் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பில் பணிகள் செய்யாமல் பணி நடந்ததாக கணக்கு காட்டி பணம் கையாடல் நடந்திருப்பதாகவும், இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி பத்மாவதி, சாலை ஆய்வாளர்கள் லட்சுமணன், ஞானசேகரன் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 30-ம் தேதி சாலை ஆய்வாளர் ஞானசேகரன் பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இதற்கான விழா அன்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஞானசேகரனை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக கூறி கலெக்டரின் உத்தரவை வழங்கினர். ஓய்வுபெறும் அரை மணி நேரத்துக்கு முன்பு சாலை ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் கலெக்டர் அனிஷ் சாப்ரா உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் பிடிஓ ஆபீசில் ஆய்வு செய்தனர். பணி நடந்ததாக கூறப்படும் ஊராட்சிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.  இது தொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் சமர்பித்தனர். அதனடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ பத்மாவதி, இன்ஜினியர்கள் செல்வி, சுப்புராஜ், மனோகரன், சாலை ஆய்வாளர் லட்சுமணன், பணி மேற்பார்வையாளர்கள் சரவணன், கண்ணபிரான், தனபால், ரவிக்குமார், கவாஸ்கர், சுகுமார், சதீஷ்குமார், சுதா ஆகிய 13 பேரை கலெக்டர் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பிடிஓ பத்மாவதி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 13 பேர் சஸ்பெண்ட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்