முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலிந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதி

வியாழக்கிழமை, 24 மே 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே.24 - அ.தி.மு.க தொழிற்சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் நலிந்த தொழிலாளர் குடும்பங்களுக்கான நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். மே தினத்தையொட்டி நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணம் அடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 106 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.53 லட்சம் உதவி வழங்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்த அ.தி.மு.க தொண்டர்கள் 12 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இதற்கான விழா நேற்று காலை 11 மணி அளவில் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல் - அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

நிதி உதவி வழங்கும் விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. தலைமை கழகம் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் போயஸ் இல்லத்திலிருந்து தலைமைக்கழகம் வரை வழிநெடுக கொடி, தோரணங்கள், பேனர்கள், கட்டப்பட்டன. அ.தி.மு.க. தலைமைக் கழகமும் அலங்கரிக்கப்பட்டது.

தலைமைக் கழகத்தின் வாயிலிலே அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பல்வேறு துணைக்கழக நிர்வாகிகள் ஆகியோரும் குழுமி இருந்தனர்.

சரியாக 11 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா தலைமைக்கழகம் வந்தார். அவரை வாழ்த்துக் கோஷங்கள் முழங்க கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்றனர்.

அதன்பின் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் நிதியுதவி வழங்கும் விழா தொடங்கியது. விழாவிற்கு அ.தி.மு.க. பேரவைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சின்னசாமி தலைமை வகித்து முதல்வரைப் பாராட்டிப் பேசினர். பின்னர் அ.தி.மு.க. தொழிற்சங்கப் பேரவை சார்பாக 106 நலிந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 53 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டது. அதேபோல பல்வேறு காரணங்களில் மரணமடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் உதவி வழங்கப்பட்டது. மொத்தம் 118 பேருக்கு 65 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

பின்னர். பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுயேட்சை உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட 769 பேர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சியில் சேர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், சட்டப்பேரவை அ.தி.மு.க. கொறடா பா.மோகன், எம்.எல்.ஏக்கள் வாலாஜாபாத் கணேசன், கணிதாசம்பத், புதுக்கோட்டை மாவட்ட கழகச் செயலாளர் விஜயபாஸ்கர், கே.புத்தன், வி.எஸ்.ராஜூ, கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, சென்னை மாநகர துணை மேயர் பெஞ்சமின், ஐ.பி.சின்னராஜ், பொன்னேரி மோகன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர், செந்தமிழன் எம்.எல்.ஏ, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ, அண்ணா தொழிற்சங்க பேரவை தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜூன், கவுன்சிலர் டி.சிவராஜ், மற்றும் வடசென்னை, தென் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்