முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை அருகே ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. 25  - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரில் கடத்தப்பட்ட ரூ. 20 கோடி மதிப்புள்ள 12 ம் நூற்றாண்டை சேர்ந்த 4 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக கோயில் ஸ்தபதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது,  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுவாச்சி என்ற கிராமத்தில் சிவந்த பாதமுடையார் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புனரமைப்பு பணியை ஸ்தபதி நாகராஜ் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கோயிலின் நிலத்தடியில் இருந்து ரூ. 20 கோடி மதிப்புள்ள 12 ம் நூற்றாண்டை சேர்ந்த 2 சிவன் சிலைகள், பார்வதி சிலை, சிவகாமி சிலை ஆகியவை எடுக்கப்பட்டன. இந்த சிலைகளை அங்கிருந்த நாகராஜ் அதை யாருக்கும் தெரியாமல் விற்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
அந்த சிலையை அவரது நண்பர் வேதாரண்யத்தை சேர்ந்த பாலகுமார் என்பவர் மூலம் விற்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். அவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன் மூலம் சிலை விற்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார். ஜெயராமன் அந்த சிலைகளை வெளிநாட்டில் நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறினாராம்.
அதே வேளையில் கங்கானி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேலு, அவரது மகன் முத்துக்குமார் ஆகிய இருவரிடமும் சிலையை விற்பதற்கு ஸ்தபதி நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாராம். இந்த நிலையில் அந்த சிலைகள் ஒரு காரில் தேவகோட்டை ரஸ்தாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்த ஒரு காரை சோதனையிட்டனர். அந்த காரில் இரண்டரை அடி உயரமுள்ள பார்வதி அம்மன் சிலையை மீட்டனர். மேலும் இது தொடர்பாக அந்த காரில் இருந்த சாமியார் பாலகுமார், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி கோபால், வடக்கு பொந்துபுலி கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்தபதி நாகராஜ், குழந்தைவேலு, அவரது மகன் முத்துகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அந்த 4 சிலைகளையும் போலீசார் மீட்டனர். தமிழக காவல் துறையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஆறுமுகம் கூறும் போது, இந்த வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உட்பட இன்னும் 6 பேர் கைது செய்யப்பட வேண்டியதுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 12 ம் நூற்றாண்டை சேர்ந்தவை. அவற்றின் மதிப்பு ரூ. 20 கோடியாகும் என்றார். மேலும் மீட்கப்பட்ட அந்த 4 சிலைகளையும் இந்து அறநிலையத் துறையிடம் ஐ.ஜி. ஆறுமுகம் ஒப்படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்