முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையில் தமிழக போலீஸ்: நெடுமாறன் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.29 - பெரியாறு அணை பகுதிக்கு  தமிழக காவல்படையை அனுப்ப நேரிடும் என   எச்சரிக்கை விடுத்துள்ள முதல்​ அமைச்சர் ஜெயலலிதாவின் துணிவை வரவேற்று பாராட்டுகிறேன் என்று கூறியுள்ள  பழ.நெடுமாறன் அப்பகுதியில் மலையாளிகள் ஆக்கிரிமிப்பை அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை பரிசோதிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைத்த ஆலோசனைக்குழு அணையின் எட்டு இடங்களில் மேலிருந்து கீழ்வரை துளையிட்டு சோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டது. அந்த துளைகளை மூடும்படி ஆணையிடப்பட்டும் அவ்வாறு செய்யவிடாமல் தமிழக அதிகாரிகளை கேரள காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பியதை கண்டிக்கும் வகையில் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் அணை மராமத்து பணிகளை செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று கேரள அரசு அடாவடியாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் அணையின் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தமிழக காவல்படையை அனுப்ப நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ள முதல்​ அமைச்சர் ஜெயலலிதாவின் துணிவை வரவேற்று பாராட்டுகிறேன்.

பெரியார் அணை பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி விட்டது என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது. பெரியாறு அணைப் பகுதியில் ஆரம்பம் முதல் அதன் பாதுகாப்பு தமிழக காவல்துறையிடம்தான் இருந்து வந்துள்ளது. இடைக்காலத்தில் இந்த அதிகாரத்தை கேரள காவல்துறைக்கு விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறாகி விட்டது. எனவே முதல்​அமைச்சர் எச்சரித்துள்ளபடி தமிழக காவல்துறையை பெரியாறு அணைப் பகுதியில் உடனடி யாக நிறுத்த வேண்டும். பெரியாறு அணையிலும் அருகிலுள்ள பேபி அணையிலும் பல்லாண்டு காலமாக கேரள அரசால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அனைத்து மராமத்து பணிகளையும் உடனடியாக நிறைவேற்று வதற்குரிய அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். மேலும் பெரியாறு அணைப் பகுதியில் தமிழகத்திற்கு சொந்தமானதும் தமிழகம் குத்தகை செலுத்தி வருகிறதுமான நிலப்பரப்பில் மலையாளிகளால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஆக்கிர மிப்புகள் அனைத்தையும் அகற்றும் பணியினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை நான் வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்