முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 நிமிடமே நடந்த மதுரை தி.மு.க. ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 31 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.31 - மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் கூட்டம் இல்லாததால் 15நிமிடமே நடைபெற்றது. அழகிரி ஆதரவாளர்கள் மேடையில் ஏற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் திமுக தலைவர் கருணாநிதி என்றால் மதுரையை பொறுத்தவரை ஒரு பகுதி திமுகவினருக்கு தலைவர் மு.க.அழகிரிதான். தலைமை என்ன அறிவித்தாலும் அதை அழகிரி ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அழகிரி என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வார்கள். கடந்த மாதம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் இல்லாத நேரம் பார்த்து கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வை நடத்தினார். இதற்கு மாவட்ட செயலாளர் தளபதியும், இளைஞரணி செயலாளர் ஜெயராமனும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் மு.க.ஸ்டாலின் கோபம் அடைந்தார். சென்னைக்கு சென்றதும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டது. இது குறித்து அழகிரியிடம் கேட்டபோது மதுரைக்கு யார் வந்தாலும் திமுகவினர் ரயில்நிலையம் சென்று வரவேற்க வேண்டும் என்று விதி இல்லை என்று  கோபத்துடன் கூறினார். இதை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட திமுகவினர் தலைமை கழகத்திற்கு பதில் அளித்தனர். அதில் தென்மண்டல செயலாளர் மு.க.அழகிரி பெயரை போடாதாதால் நாங்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தனர். ஆனால் கட்சியின் அவைத்தலைவரும், முன்னாள் வடக்கு மண்டல தலைவருமான இசக்கிமுத்து, எங்களிடம் விளக்கம் கேட்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பதில் அனுப்பி இருந்தார். இதனால் கோபம் அடைந்த தலைமை இசக்கிமுத்தை கட்சியில் இருந்து நீக்கியது. இதனால் மேலும் கோபம் அடைந்த அழகிரி கருணாநிதியை சந்தித்து முறையிட்டதின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது. பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு கோஷ்டிகளிடையே இந்த பிரச்சினை இன்னும் புகைந்து கொண்டிருப்பது நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

   மத்திய அரசு வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலையை உயர்த்தியது. இதை கண்டித்து நேற்று முன்தினம் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய இதே இடத்தில்தான் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்காட்ரோடு முழுவதும் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகளும், தொண்டர்களுமாகவே காட்சியளித்தன. ஆனால் நேற்று திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காலை 10.30 மணி ஆகியும் 100 தொண்டர்கள் கூட வரவில்லை. சாலை எங்கும் வெறிச்சோடி கிடந்தது. காலை 10 மணிமுதல் 12 மணிவரை 2மணி நேரம் போலீசிடம் அனுமதி கேட்டிருந்த திமுகவினர் கூட்டம் இல்லாததால் 10.30 மணிக்கு ஆரம்பித்து 10.45மணிக்கு முடித்துக்கொண்டனர். சுமார் 15 நிமிடமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஒரு அரைபாடி லாரி ஒன்று கொண்டு வந்து நிறுத்தப்பட்டு அதில் பேனர்கள் கட்டப்பட்டது. இந்த மேடையில் மாவட்ட செயலாளர் தளபதி, பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்டோர் இருந்தனர். அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் எம்எல்ஏ கவுஸ்பாட்சா, மிசா பாண்டியன், வக்கீல் மோகன்குமார், பகுதிசெயலாளர் ரவீந்திரன், அவைத்தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் மேயர் தேன்மொழி கணவர் கோபிநாதன் உள்ளிட்டோர் மேடைக்கு எதிர்புறம் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். மாவட்ட செயலாளர் தளபதி மேடைக்கு வந்து பேசுங்கள் என்று கூறிய போது மைக்கை இங்கே கொடு என்று சத்தம் போட்டனர். இதே போல் பொன்முத்துராமலிங்கம் பேசும் போது, மேடையில் இருந்தவர்கள் பெயரை மட்டும் கூறிவிட்டு கீழே உட்கார்ந்து அழகிரிஆதரவாளர்களின் பெயரை சொல்லவில்லை. ஆளுக்கொரு ஒருபுறம் உட்கார்ந்து கொண்டு இருகோஷ்டிகளாகவே பிரிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த காட்சியை பார்த்த திமுக அடிமட்ட தொண்டர்கள்  இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக இருந்து கட்சியை கொஞ்சம், கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறார்களே என்று புலம்பிய படி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்