முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

45 நாட்களுக்கு பிறகு இறால் மீன் வரத்து அதிகம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், ஜூன். 1 - 45 நாள்களுக்கு பிறகு ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களுக்கு அதிகமான இறால் மீன் வரத்து கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.   மீன் இன பெருக்கம் மற்றும் கடல் வளம் பாதுகாப்பிற்காக ஏப். 15 முதல் மே மாதம் 30 ம் தேதி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.  இந்த தடை காலத்தில் படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி புதிய வலைகள் மற்றும் மீன்பிடி தளவாட பொருள்களை பல லட்சம் செலவில் மீனவர்கள் வாங்கினார்கள்.  இத்தடை காலம் முடிந்தவுடன் மே மாதம் 30 தேதி தமிழகத்தில் உள்ள சுமார் 13 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. 

இதில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபத்தில் இருந்து மே 29 ம் தேதி நள்ளிரவு மற்றும்மே மாதம் 30 தேதி அதிகாலையில் சுமார் 2000 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன.  இம்மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரைக்கு திரும்பினர். இதில் மீனவர்கள் எதிர்பார்த்தப்படி ஒரு படகிற்கு சராசரியாக 180 கிலோ இறால் மீனும், 100 கிலோ கணவாய் மீனும் கிடைத்தது.

ஒரு கிலோ இறால் மீன் ரூ. 400 முதல் 450 வரை சென்றதால் மீனவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஒரு படகு மீன்பிடிக்க டீசல் எரிபொருள், ஐஸ் கட்டி, உணவு மற்றும் மீனவர் கூலியாக ரூ. 40 ஆயிரம் வரை செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்