முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராக்கிங்கை ஒழிக்க போலீஸ் சிறப்பு ஏற்பாடு

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - கல்வி நிலையங்களில் ராக்கிங் தொல்லை பற்றி மாணவர்கள் போலீஸ் வலைதளத்தில் உள்ள தனி இ.மெயில் முகவரிக்கும் மற்றும் தொலைபேசியில் 100-க்கும் தகவல் கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. புதிதாக சேரும் மாணவர்களை பழைய மாணவர்கள் ராக்கிங் செய்து கொடுமைப்படுத்துவதை தடுக்கவும், ராக்கிங்கை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போலீஸ் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இது தொடர்பான புகார்களை கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக டி.ஜி.பி. அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருப்பதாக கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) எஸ்.ஜார்ஜ் கூறியுள்ளார்.

புகார் தெரிவிப்பதற்காக போலீஸ் வலைதளத்தில் உள்ள WWW.tnpolice.gov.in  என்ற மின்னணு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் 100-க்கு தொலைபேசி செய்தும், உள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் உதவியை நாடலாம். போலீஸ் அதிகாரிகள் தங்களது தொடர்பு எண்களை எஸ்.எம்.எஸ். செய்வதற்காக மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர ராக்கிங் புகார்களுக்காக போலீஸ் தரப்பில் ragging [email protected] என்ற தனி இ.மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் டி.ஜி.பி.எஸ்.ஜார்ஜ் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் கல்வி நிலையங்களின் தலைமை அதிகாரிகளுடனும், ராக்கிங்கிற்கு எதிராக அமைக்கப்பட்ட குழுக்களுடனும் நல்ல தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதிக புகார்கள் வரும் நகரம் மற்றும் மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ராக்கிங் கொடுமை பற்றியும், அதற்கு சட்டப்படி விதிக்கப்படும் தண்டனை என்ன என்பது பற்றியும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ராக்கிங்தவிர பிற சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடந்தாலும் அது பற்றி மாணவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தகவல் கொடுக்கும் மாணவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். இந்த விஷயத்தில் முதலாண்டு மாணவர்களின் நடத்தைகளை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணித்து ஒத்துழைக்க வேண்டும். 2011-12-ம் கல்வியாண்டு ராக்கிங் அற்ற ஆண்டாக இருந்தது.

இவ்வாண்டும் அதுபோன்ற நிலைமை ஏற்படுத்தப்படும். போலீஸ் தரப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்  பேரணிகள் நடத்தப்படும். கல்வி நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்