முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகம்: குடம்குடமாக சுவாமிக்கு பாலாபிஷேகம்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகம்: குடம்குடமாக சுவாமிக்கு பாலாபிஷேகம்
திருப்பரங்குன்றம், ஜூன்.- 4 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று வைகாசி விசாக பால்குடத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று மொட்டையரசு திருவிழா நடக்கிறது. முருகப்பெருமானின் முதல்படை வீடு என்னும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக பால்குடத்திருவிழாவாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் அத்திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி சுவாமிகளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினம் இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மனுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 30 நிமிடம் வசந்த உற்சவம் நடைபெற்றது. பால்குடத்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு சண்முக சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். சண்முகருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்த அதே நேரத்தில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடங்களை சுமந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் சுமந்து வந்த குடங்களில் இருந்த பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காலை 7மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தர்கள் பால் மட்டுமின்றி இளநீர், பன்னீர், தயிர், புஷ்பம், பறவைகாவடிகள் எடுத்து வந்தனர். பலர் முகங்களில் 20 அடி நீளமுள்ள வேலால் அலகு குத்தியும், ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்தினர். பலர் 16 கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர். காலையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மனுடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று மொட்டையரசு திருவிழா நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று காலையில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மனுக்கு பல்வகை அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரமாகி தங்க குதிரை வாகனத்தில் சட்டத்தேரில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு 11 மணிக்கு சுவாமி பூப்பல்லக்கில் கோவில் சென்றடைவர்.

பாக்ஸ் நியூஸ்:
சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு, லட்சார்ச்சனை, கந்தசஷ்டி திருவிழாவின் போது தினம் இருவேளை சண்முகார்ச்சனை நடைபெறும். வைகாசி விசாக தினத்தன்று மட்டும், சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் சன்னதியைவிட்டு புறப்பாடாகி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது.

புட்நோட்:
படஓ1
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழாவிற்காக பால்குடங்களை தலையில் சுமந்து வந்த பக்தர்களின் ஒரு பகுதி.
படஓ5,8
விசாக திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பக்தர்கள் மயில்காவடி, பறவை காவடி எடுத்து வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
--------------------------
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago