முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை ரவுடிக்கும்பல் அடக்கி ஆளுகிறது விழுப்புரத்தில் ஜெயலலிதா பேச்சு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

விழுப்புரம், மார்.- 31 - தி.மு.க அமைச்சர் பொன்முடியின் அராஜகத்தை நாடே அறியும், அவரது கொட்டத்திற்கு இந்த தேர்தலில் முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தை ரவுடிக்கும்பல் அடக்கி ஆளுகிறது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.  ஜெயலலிதா நேற்று விழுப்புரம் தொகுதி வேட்பாளர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதி வேட்பாளர் கே.பி.நாகராஜன், திண்டிவனம் தொகுதி டாக்டர் ஹரிதாஸ், விக்கிரவாண்டி தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்.ராமமூர்த்தி, செஞ்சி தே.மு.தி.க வேட்பாளர் சிவா என்கிற சிவலிங்கம் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் ஜானகிராமன் ஆகியோரை ஆதரித்து விழுப்புரத்தில் பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.

தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அமைச்சர் பொன்முடி அரங்கேற்றிய வன்முறைகளைப்பற்றி என்னைவிட உங்களுக்குத்தான் அதிகம் தெரியும்.5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் அவர் ஆடாத ஆட்டமல்ல. அவர் ஆட்டத்தை அடக்க வேண்டும். இந்த தேர்தலில் பொன்முடியின் கொட்டத்தை அடக்கவேண்டும். அவரது கொட்டத்திற்கு முடிவு கட்டவேண்டும்.

விழுப்புரத்துக்கு பாதாள சாக்கடைத்திட்டம் விரைந்து முடிக்கப்படும். பழைய இடத்திலேயே விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை இயங்கும். புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மயிலம், செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன். அதை தீர்ப்பதற்கு அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஜெயலலிதா திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். விழுப்புரத்திற்கு முன்னதாக உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதாவிற்கு ஹெலிகாப்டர் தளத்திலிருந்து பிரச்சாரம் நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்