முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் தனி ஹெலிகாப்டரில் வருகிறார்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

வேலூர், மார்ச்.- 31 - வேலூர் மற்றும் ஜோலார்ப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் தனி ஹெலிகாப்டரில் வருகிறார். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) பிரச்சாரம் செய்கிறார். ஜோலார்ப்பேட்டை, மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். முதலாவதாக, இன்று காலை 11 மணி அளவில் ஜெயலலிதா தனி ஹெலிகாப்டரில் ஜோலார்ப்பேட்டை அடுத்த புதூரில் அமைக்கப் பட்ட ஹெலிபேட்டில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து அவர் பிரசார வேனில் ஏறி ஜோலார்ப்பேட்டைக்கு சென்று பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த பொதுக் கூட்டத்தில், ஜோலார்ப்பேட்டை தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர் கே.சி.வீரமணி (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்), திருப்பத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.வி.சம்பத்குமார், ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம்பாஷா (மனித நேய மக்கள் கட்சி), குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கமுத்து, அணைக்கட்டு வேட்பாளர் வி.பி.வேலு (தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர்) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

இதையடுத்து வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக, ஜோலார்ப்பேட்டையில் இருந்து அவர் தனி ஹெலிகாப்டரில் ஏறி வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள  சிறை அலுவலர்கள் அணிவகுப்பு மைதானத்திற்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து பிரச்சார வேனில் ஏறி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த பிரசார கூட்டத்தில், வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் விஜய், காட்பாடி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஆற்காடு அ.தி.மு.க. வேட்பாளர் வி.கே.ஆர். சீனிவாசன், அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவி, ராணிப்பேட்டை அ.தி.மு.க. வேட்பாளர் முகமது ஜான், சோளிங்கர் வேட்பாளர் (தே.மு.தி.க.) பி.ஆர்.மனோகர், கே.வி.குப்பம் வேட்பாளர் (இந்திய குடியரசு கட்சி) செ.கு.தமிழரசன் ஆகிய 7 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்