முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது வளர்ந்த நாடுகள்தான்: பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

ரியோடி, ஜெனிரோ, ஜூன். - 24 - சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கரியமில வாயுவை வளர்ந்த நாடுகள்தான் அதிகம் வெளியிடுகின்றன என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ரியோ பிளஸ் 20 மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 20 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 125 தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் இறுதி நாளில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, தொழில் வளர்ச்சியில் முன்னேறி உள்ள வளர்ந்த நாடுகள் கரியமில வாயு வெளியீட்டை கட்டுப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பங்களையும், நிதி உதவியையும் வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியாவது குறித்து சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவது தவிர்க்கப்படும். ஆனால் மிக குறைந்த அளவிலேயே வளரும் நாடுகளுக்கு உதவிகள் கிடைத்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விட்டது. பொருளாதார வளர்ச்சி என்பது சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் சீர்கெடாமல் பாதுகாப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதுதான். ஒவ்வொரு நாடும் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ச்சியடைய துணை நிற்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமை. வளரும் நாடுகள் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே முன்னேறி வருகின்றன. சுற்றுச்சூழலின் பாதுகாப்பை சுட்டிக்காட்டி அவற்றின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.  அனைத்து நாடுகளுமே எரிசக்தி துறையில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டியதுள்ளது. பெட்ரோல், டீசல் எரிவாயு, மின்சாரம், நிலக்கரி உள்ளிட்டவற்றை சரியான முறையில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் சூரிய சக்தி மூலம் மின்சார தயாரிப்பை அதிகரிக்க தேசிய சூரியசக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் பொருளாதார வளர்ச்சிக்காக தொழில்மயமாதல் நடவடிக்கைகளை எடுக்கும் போது அது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வளரவிடாமலும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இதில் அனைத்து நாடுகளும் சமமாக பங்காற்ற வேண்டும். இந்தியாவில் இதற்கான சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு கரியமில வாயு வெளியிடப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கம் தொடர்பான சர்வதேச மாநாடு இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இது போன்ற மாநாடுகள் மூலம் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்