முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு பெருந்துறையில் பிரசாரம் செய்யாமல் சென்ற கருணாநிதி

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு, ஏப்.1 - ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கூட்டம் குறைவாக இருந்ததால் கொ.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஒருவார்தைகூட பேசாமல் கருணாநிதி சென்றதால் அக்கட்சியினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி 2-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை புதன் அன்று கோவையில் தொடங்கி அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார். பின் அவர் நேற்று கோவையில் இருந்து கார் மூலம் கருமத்தம்பட்டி, அவினாசி, பெருமாநல்லூர் வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு வருவதாகவும், முன்னதாக ஈரோடு வரும் வழியில் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சியான கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர் கே.கே.சி. பாலுவுக்கு வாக்கு சேகரித்து பேசுவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை 10 மணி முதல் பெருந்துறை தொகுதி வேட்பாளர் கே.கே.சி.பாலு தலைமையில் கொ.மு.க.வினரும், அப்பகுதியில் உள்ள தி.மு.க.வினரும், கருணாநிதி வருகைக்காக கடும் வெயிலில் காத்திருந்தனர். அப்போது மதியம் 12.30 மணி அளவில் பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகே வந்த கருணாநிதி தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை மட்டும் பெற்றுக்கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஒருவார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டார். இதற்கு அப்பகுதியில் கூட்டம் அதிகம் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சி வேட்பாளர் பாலு பெரும் அதிர்ச்சியும், சோகமும்  அடைந்தார். அங்கு கூடியிருந்த கொ.மு.க.வினர் இதே தொகுதியில் தி.மு.க.வினர் வேட்பாளராக நின்றிருந்தால் இவ்வாறு பேசாமல் கருணாநிதி செல்வாரா என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். தி.மு.க. தலைவர் கருணாநிதி கொ.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஒருவார்த்தை கூட பேசாதது கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்