முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுர்ஜீத்சிங்தான் விடுதலை: பாகிஸ்தான் திடீர் பல்டி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 28 - மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மன்னித்து விடுதலை செய்துள்ளதாக செய்தி வெளியாகி, அதுகுறித்து இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிலும் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், திடீரென அதை மறுத்துள்ளது அந்நாட்டு அதிபர் மாளிகை. சரப்ஜீத் சிங்கை விடுவிக்கவில்லை, மாறாக சுர்ஜீத் சிங் என்ற கைதிதான் விடுதலை செய்யப்படவுள்ளார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

49 வயதாகும் சரப்ஜீத் சிங் லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் அடைபட்டுள்ளார். அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 20 வருடங்களாக தூக்குக் கயிற்றுடன் போராடி வருகிறார் சரப்ஜித் சிங். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இரு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் போராடி வருகின்றன. இந்தியத் தலைவர்களும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்தபடி உள்ளனர். கடந்த மாதம் சர்தாரிக்கு புதிதாக ஒரு கருணை மனுவையும் அனுப்பியிருந்தார் சரப்ஜித் சிங். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, பாகிஸ்தான் மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. சரப்ஜீத் சிங்கை அதிபர் சர்தாரி மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. இதனால் இரு நாடுகளிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவிலும் மகிழ்ச்சி அலை வீசியது. சரப்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். கிட்டத்தட்ட ஐந்து மண நேரம் இந்த செய்தி நீடித்தது. இரு நாட்டு டிவி சேனல்களிலும் சரப்ஜித் சிங் குறித்த செய்திகளே தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் நேற்று முன்தினம் இரவுக்கு மேல் பாகிஸ்தான் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் கூறுகையில், விடுதலை செய்தி குறித்து ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. முதலில், இது அதிபர் வழங்கிய மன்னிப்பு அல்ல. அடுத்து, விடுதலை செய்யப்படவுள்ளவர் சரப்ஜீத் சிங் அல்ல, சுர்ஜீத் சிங் என்ற கைதிதான் விடுவிக்கப்படவுள்ளார்.

சச்சா சிங் என்பவரின் மகனான சுர்ஜீத் சிங், கடந்த 30 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 1989ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ பரிந்துரையின் பேரில், அதிபர் குலாம் இஷாக் கான் உத்தரவின் பேரில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர். அவர்தான் தற்போது விடுதலை செய்யப்படவுள்ளார். சரப்ஜீத் சிங் விடுவிக்கப்படவில்லை என்று விளக்கினார்.

அதே போல சட்ட அமைச்சர் பரூக் நிக் கூறுகையில், சுர்ஜீத் சிங் கடந்த 30 வருடங்களாக சிறையில் உள்ளார். அவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இத்தனை ஆண்டு காலம் ஆகி விட்டதால், இனியும் அவரை சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதமாகும் என்பதால் சுர்ஜீத் சிங் விடுவிக்கப்படவுள்ளார் என்றார். மேலும் அதிபருக்கும், சுர்ஜீத் சிங் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது வழக்கமான சட்ட நடைமுறைதான் என்றும் நிக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக ஜியாவுல் ஹக் இருந்தபோது எல்லைப் பகுதியில் வைத்து பிடிபட்டவர் சுஜீத் சிங். உளவு பார்த்ததாக கூறி கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதித்து விட்டனர். சரப்ஜீத் சிங்கை விடுவிக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் அவரை விடுவிப்பதாக முதலில் செய்தி பரவ விட்டு விட்டு இப்போது சுர்ஜீத் சிங் என்பவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பது வேண்டுமென்றே வெறுப்பூட்டும் செயலாக கருதப்படுகிறது. மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையான அபு ஜிண்டாலை அமெரிக்காவின் உதவியுடன் சவூதியிலிருந்து இந்தியா கொத்திக் கொண்டு வந்து விட்டதால் கோபமடைந்துள்ள பாகிஸ்தான் அந்த வெறுப்பை இப்படிக் காட்டுவதாகவும் சந்தேகம் எழுவதாக கருத்து நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்